ராஜேந்திர பாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன் ? – விருதுநகர் அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட மோதல் – இந்த தலைப்பில் 03.03.2020 அன்று குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் செய்தி வெளியானது. அன்று மாலையே அந்த செய்தியை எழுதிய விருதுநகர் மாவட்ட நிருபர் கார்த்தி க்கு அருவாள் வெட்டு விருந்திருக்கிறது !

விருதுநகர் மாவட்ட அதிமுக உள்கட்சி மோதல் குறித்து நேற்று(03.03.2020)குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் விரிவான கட்டுரை வெளியானது. உள்ளூர் மாவட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் அவரால் அரசியலில் வளர்க்கப்பட்ட ராஜவர்மன் என்பவருக்கும் இடையே அரசியல் மோதல் இருந்து வருகிறது என்பதை விரிவாக விவரித்தது அந்த கட்டுரை. அந்த செய்தியை எழுதியது விருதுநகர் மாவட்ட நிருபர் எம்.கார்த்தி.
சவ்டால் பேச்சுக்கும் சர்ச்சை வாதத்துக்கும் பெயர் போன ராஜேந்திரபாலாஜியின் அரசியல் விளையாட்டு சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நேற்று இரவு டீ சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்ற நிருபர் கார்த்தி யை சுற்றி வளைத்த ஒரு கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறது. படுகாயமடைந்த கார்த்தி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது.
நிருபர் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம், ‘’குறிப்பிட்ட அந்த செய்தி வெளியானதும் ’ஏன் இப்படி செய்தி போட்டீங்க’ என்கிற அர்த்தத்தில் சிலர் கார்த்தியிடம் பேசியிருக்காங்க. ’என்ன தலைவா இப்படி செய்தி போட்டிருக்கீங்க’ னு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரப்பிலிருந்தும் கேட்கப்பட்டிருக்கிறது. ‘ராஜேந்திரபாலாஜி சம்மந்தமா இன்னும் நிறைய செய்தி தருகிறேன் வாங்க’ என குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்த போனும் வந்திருக்கிறது. அதுக்கு போக மறுத்த கார்த்தி பகல் முழுவதும் வீட்டில் இருந்ததால் மாலையில் வெளியில் கிளம்பியிருக்கிறார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்துவிட்டது. வழக்கமாக டீ சாப்பிட செல்லும் கடைக்கே நேற்றும் கார்த்தி சென்றிருக்கிறார்.
அதை நோட்டமிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. அருவாளால் கண்மூடித்தனமாக தாக்கியதில் தலை,முகம். வாய் என பல இடங்களில் வெட்டு விழுந்திருக்கிறது. கிட்டதட்ட 16 பற்கள் உடைந்து விழுந்திருக்கிறது. இப்போ அவரால் பேச முடியவில்லை’’என்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில், ‘அந்த சம்பவம் சம்மந்தமாக இரண்டுபேர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ’இந்த சம்பவத்துக்கும் அமைச்சருக்கும் மற்ற யாருக்கும் தொடர்பில்லை. அந்த செய்தி எங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அதை எழுதிய நிருபரை கொலை செய்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் நாங்கள் தாக்கினோம். அந்த நிருபர் எங்களை தள்ளிவிட்டுவிட்டு ஓடி தப்பித்துவிட்டார்’னு சொல்றாங்க. இன்னும் விசாரணை முடியபில்லை. முடிந்த பிறகுதான் முழு விபரமும் தெரியும்’’ என்கின்றனர்.