என்.சி.சி.யில் பெண்கள் அதிகளவில் சேர வேண்டும் : பிரதமர் மோடி

0
88
n.c.c modi

‘’என்.சி.சி.., எனப்படும் தேசிய மாணவர் படையில், பெண்கள் அதிகளவில் சேர வேண்டும்,’’ என, இந்திய பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் என்.சி.சி., முகாம் நடக்கிறது. இன்று அது நிறைவு பெறுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, என்.சி.சி., படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின் பிரதமர் பேசினார். ’’தேசமே முதன்மை என்ற எண்ணம், அனைவரிடமும் பரவ வேண்டும். நானும்,என்.சி.சி.,யின் உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன். என்.சி.சி.,யை பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது நடந்த அணி வகுப்பில் பெண்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் என்.சி.சி., படையினர், எல்லை பாதுகாப்பு பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயுதப்படைகளில் பெண்களுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. என்.சி.சி.யில் பெண்கள் அதிகளவில் இணைந்து, அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், என்.சி.சி.,யினர் ஈடுபட வேண்டும். போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்க வேண்டும்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில், இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. உள்ளூர் தயாரிப்புகளின் தேவை அதிகரித்தால், உற்பத்தி பெருகி வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

தேசம்தான் முதன்மை என்ற உணர்வுடன் செயல்படும் இளைஞர்கள் இடம் பெற்றுள்ள நாட்டின் வளர்ச்சியை, யாராலும் தடுக்க முடியாது’’ என்றார் பிரதமர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here