திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா ஐந்தாம் திருவிழா

0
71
thiruchendur murugan news

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா ஐந்தாம் திருவிழாவான நேற்றுஇரவு சிவன் கோயிலில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானைக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில் எதிர்திசையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி உற்சவ திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. 5ம் திருவிழாவான நேற்றுகாலை 7 மணிக்கு சுவாமி சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகள் சுற்றி சிவன் கோயில் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பட்டு சன்னதி தெருவில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் மண்டபத்தை சேர்ந்தார். அங்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி, அம்மன் அங்கிருந்து புறப்பட்டு சிவன் கோயிலை சேர்ந்தனர். நேற்றுஇரவ அங்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின்னர் சிவன் கோயில் பிரதான முகப்பில் உள்ள கதவு சாத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கீழரதவீதியில் முகப்பிலிருந்து சுவாமி, அம்மனுக்கு காட்சி கொடுத்ததும் சிவன் கோயிலின் பிரதான கதவு திறக்கப்பட்டு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்திகோஷம் முழங்கினர். பின்னர் சுவாமி, அம்மன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

விழாவின் 6ம் திருவிழாவான இன்று(4ம் தேதி)காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தார். பின்னர் பகல் 10 மணிக்கு காயாமொழி ஆதித்த நாடார்கள் மண்டபகப்படியில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. பின்னர் கீழரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதினம் மண்டகப்படியில் சேர்ந்தார். அங்கு சுவாமி, அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. இரவில் சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் திருவிழவான நாளை(5ம் தேதி) அதிகாலை சுவாமி சண்முகர் உருகு சட்டசேவையும், மாலையில் சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும் வீதி உலா நடக்கிறது. 8ம் திருவிழாவான 6ம் தேதி அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகலில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் வீதி உலா நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 8ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here