உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் மாநில அளவிலான சுகாதார திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றார்.
கோரக்பூரில் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் ஜன் ஆரோக்கிய மேளா திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது: பா.ஜ.க., அரசு மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஜன் ஆரோக்கிய மேளா இனி ஒவ்வொரு ஞாயிறன்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெறும். மருத்துவர்களின் இலவச ஆலோசனைகளையும், மருந்துகளையும் இதன் மூலம் பெறலாம். 2020ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் கோவிட் காரணமாக பாதியில் நிறுத்தும் படி ஆனது.
மாநிலத்திலுள்ள 403 சட்டசபை தொகுதிகளிலும் 100 படுக்கைகளுடன் அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனை ஏற்படுத்தப்படும். 1977 முதல் 2017 வரை மாநிலத்தில் 50 ஆயிரம் குழந்தைகளின் உயிரை மூளை அழற்சி நோய் பறித்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியினால் அந்நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மூளை அழற்சி நோய் முழுவதுமாக ஒழிக்கப்படும். இவ்வாறு கூறினார்.