அக்கறையும் ஆர்வமும் இருந்தும் ரஜினி ஏன் தயங்குகிறார் ? -nadunilai.com R.S.சரவணப்பெருமாள்

0
120
Rajini news

ஆர்வமும் ஆசையும் இருந்தாலும் கடந்து போகிற பாதையை நினைத்து பார்ப்போருக்கு சில சமயங்களில் தயக்கம் ஏற்படுவது சகஜம்தான். அப்படிபட்ட தயக்கத்தில் ரஜினியும் மாட்டிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.

சாமான்யனாக இருந்து ஆஸ்தி, அந்தஸ்து மற்றும் ஆன்மிக வாசனையை பெற்றிருக்கும் ரஜினிக்கு சமூகத்தில் நடைபெறும் அவலங்களை துடைத்து மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையும் இருக்கிறது. ஆனால் அதை செய்துவிட இடையூறுகள் ஏராளம் இருப்பதால் கொஞ்சம் தயக்கமும் அவரோடு ஒட்டிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

ஆன்மிகம் சார்ந்த கலைஞனாக இருக்கும் ரஜினியை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அரசியல் பேசவைத்தது. அரசியல் கலந்த சினிமாவே எம்.ஜி.ஆரை முதல்வர் ஆக்கியது போல், ரஜினிக்கும் அப்படி ஒருவாய்ப்பு இயல்பாகவே வருகிறது. என்றாலும் வாய்ப்பு வருகிறது என்பதற்காக அவர் உடனே அரசியலுக்குள நுழைந்துவிட விரும்ப வில்லை. அதுதான் இப்போது ரஜினிக்கு பிளஸும் மைனஸும்.

எது சரி எது தவறு என்பதை தொலை நோக்கு சிந்தனையோடு பளிச் என சொல்லிவிடும் ரஜினியின் கருத்தே அவரது அரசியல் சொத்து. சில பிரச்னைகளுக்கு அவர் கருத்து சொல்லாமல் தவிர்த்திருக்கிறார். அது விமர்சிக்கவும் பட்டிருக்கிறது. அதற்கு இதுவே தீர்வு என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். நல்ல நெறிமுறை வேண்டும் என்பதை சொல்லும் ஆன்மிக அரசியலே அவரது நோக்கம் என்பதாக இருப்பதால் அவரை பெரும்பாலான மக்கள் ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது.

நீண்ட காலமாக அரசியலை வியாபாரமாக, தொழிலாக பார்த்துவருவோருக்கு ரஜினியின் இந்த அரசியல் முறன்பட்டதாகத்தான் தோன்றும். ஒரு ஆன்மிக வாதி கடைபிடிக்கும் அத்தனை கடமைகளையும் அரசியல்வாதி கடைபிடிக்க வேண்டும் என சொல்ல வருகிறார் ரஜினி.

ரஜினியின் வெளிப்படைத் தன்மைக்கு சில அரசியல்வாதிகள் உண்மையில் ஆடிப்போய்தான் இருக்கிறார்கள். ஆன்மிக அரசியல் என்று வேற சொல்லியிருக்கிறார் என்பதால் ‘மதம்’ சார்ந்த பார்வையும் தவறாக பார்க்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. அறநெறியை கையாள்வதே ஆன்மிக அரசியல் என்றுபார்க்காமல் அதை மக்களில் சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலமாக அரசியலில் ஆன்மிகம் மதமாகவே பார்க்கப்பட்டு வருவதுதான் அதற்கு காரணம்.

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த ரஜினியை, அவரது ரசிகர்கள் தமிழக முதல்வராகவே எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்தநிலையில் அவர் வேறுவிதமாக அறிவித்திருக்கிறார் என்கிறபோது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல அவரை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சிதான்.

அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் வேலையை பல கட்சிகள் துவங்கிவிட்ட நிலையில் ரஜினி என்ன செய்யபோகிறார் என்கிற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி தனது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை செய்தார்.

மா.செயலாளர்கள் மத்தியில் மூன்று திட்டங்கள் குறித்து யோசனை கேட்டார். இரண்டை ஏற்றுக் கொண்ட மா.செக்கள் ஒன்றை கடுமையாக நிராகரித்தனர். இதனால் அதிருப்தியான ரஜினி, மீடியாக்களிடம், எல்லாம் திருப்தி ஒன்று மட்டும் திருப்தியில்லை. அதை பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். தகவல்களை வெளியில்விட கூடாது என மா.செக்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் யாரும் மூச்சுவிடவில்லை.

அப்படிபட்ட செய்திதானே விரும்பி எதிர்பார்க்கப்படும். அதனால் ஊடகங்களும் சமூக வலைதளங்களும் யூகங்களை பறக்கவிட்டன.

இதற்கிடையே 12.03.2020 அன்று செய்தியாளர்கள் முன் தோன்றிய ரஜினி, ‘’அன்றைக்கு நான் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசிவிட்டு வெளியில வந்து மீடியாகிட்ட பேசினேன். அப்போ எல்லாருக்கும் திருப்தியாக இருந்தது. ஆனா எனக்கு மட்டும் ஒரு விசயத்தில் திருப்தி இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஏமாற்றம். அப்படின்னு சொன்னேன். மற்றபடி எதையும் சொல்லவில்லை. அது ஊடகங்களில் பல விதத்தில் பேசப்பட்டது. உள்ளே என்ன நடந்ததுன்னு. மாவட்ட செயலாளர்களிடைருந்து எந்த விசயமும் வெளியில் வரலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லனும் முற்றுப்புள்ளி வைக்கனும். அதேநேரத்தில் என்னுடைய வருங்கால அரசியல் எப்படி இருக்கும். நான் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிற ரசிக பெருமக்களுக்கும் மக்களுக்குமொரு கண்ணோட்டம். கட்சி ஆரம்பிக்க முதலே சொல்லிட்டா அவங்களுக்கும் ஒரு தெளிவு வரும்.எனக்கும் அதில் எப்படி அதிர்வுகள் வரும் என்பதை புரிந்துக் கொள்ள முடியும் என்பதற்காகத்தான் இந்த சந்திப்பு.

1996 லிருந்து 25 வருஷமா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர்றேன் அரசியலுக்கு வர்றேன்னு சொல்லிக்கிட்டே இருக்கார்னு கமெண்ட் அடிக்கிறாங்க. நான் முதல்ல அரசியலுக்கு வருவேன்னு சொன்னது 2017-ம் வருஷம் டிசம்பர் 31. அதுக்கு முன்னாலே நான் அரசியலுக்கு வருவேன்னு சொன்னதே கிடையாது. எப்போ நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு கேட்கும்போது அது ஆண்டவன் கையிலதான் இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்.

25 வருஷமா அரசியலுக்கு வருவேன் வருவேன்னு சொல்றாருன்னு இனிமேலாவது சொல்லமாட்டாங்கன்னு நினைக்கிறேன். 1996 எதிர்பாராவிதமா அரசியலில் என்னுடைய ரோல் இடம்பெற்றது. அப்போயிருந்து என்னுடைய மதிப்புக்குறிய டாக்டர் கலைஞர் அவர்கள், மூப்பனார் அவர்கள், அருமை நண்பர் சோ சார் அவர்களிடத்தில் பேசி பழகியதில் ஒரு வேலை நான் அரசியலுக்கு வரனும்னு என் தலையில எழுதியிருந்தால் நான் எந்தமாதிரி அரசியல் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு போகனும்னு அரசியலை தீவிரமா கவணிக்க ஆரம்பிச்சேன்.

நான் எப்படியெல்லாம் அரசியலை கொண்டு போகவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த போதுதான்ஜெயலலிதா அவர்கள் இறந்து 2017-ல் சிறத்தன்மை இழந்த சூழ்நிலை உருவானது. அப்போது என்னை வாழவைத்த தெய்வங்களுக்காக நான் அரசியலுக்கு வர்றேன்னு முதன் முதலில் நான் சொன்னேன்.

அப்போதான் ’சிஸ்டம் கெட்டுபோயிருக்கு’ன்னு நான் சொன்னேன். சிஸ்டமே சரி செய்யனும். ஜனங்க மனதில் முதலில் மாற்றத்தை உருவாக்கனும். சிஸ்டம் சரிசெய்யப்படனும்னு சொன்னேன். சிஸ்டம் சரி செய்யாமல் அரசியலில் மாற்றம் செய்யாமல் ஆட்சி மாற்றம் செய்தால் மீன் குழம்பு வைச்ச பாத்திரத்தை கழுவாமல் அதில் சர்க்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்கும் அதுமாதிரிதான் இருக்கும் அந்த ஆட்சி.

முதலில் அரசியல்மாற்றம் கொண்டு வரனும். அதுக்கு நான் மூன்று திட்டத்தை வைச்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ஒன்றை சொல்லிக்கிறேன். நான் கவனித்ததில் தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுக என இரண்டு பெரிய கட்சிகள் இருக்கிறது. அந்த கட்சிகளில் பூத் கமிட்டி அப்படி இப்படின்னு சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேல் கட்சி பதவிகள் இருக்கிறது.

இதெல்லாம் தேர்தல் நேரத்தில் தேவை. நிர்வாகிகள், நிர்வாகிகளின் குடும்பத்தார், நண்பர்கள் என்று எல்லாரும் உழைப்பார்கள் அது தேர்தல் நேரத்தில் தேவைதான். தேர்தல் முடிந்த பிறகு அந்த பதவிகள் தேவையில்லை.

அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் நாம ஆளும் கட்சி ஆட்கள் என்றுசொல்லி முழுவதுமாக டெண்டர், காண்ட்ராக் எடுக்கிறதிலிருந்து எல்லா இடத்திலும் ஊழல் நடக்கும். ஜனங்களுக்கு அந்த பணம் போகாம தடுக்கிறாங்க. நான் எல்லாரையும் சொல்லலை. பலபேர் அப்படி பண்றாங்க. அது ஆட்சிக்கும் கெட்டபெயர், மக்களுக்கும் கெட்டபெயர். சிலபேர் கட்சிப்பதவிகளை தொழிலாகவே வைச்சிருக்காங்க. வேறு தொழில் இல்லை. அதுதான் தொழில்.

நாம ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நேரத்தில் எவ்வளவு பதவிகள் தேவையோ அதை வைத்துக் கொண்டு. தேர்தல் முடிந்தபிறகு கட்சி நடத்துறதுக்கு அத்தியாவசியத்துக்கு தேவையான பதவிகளை மட்டும் வைத்திருப்போம். நம்ம வீட்டில் ஒரு விழா நடத்துகிறோம். அப்போ நமக்கு நிறைய சமையல்காரங்க தேவை. வேலைக்காரங்க தேவை நிறைய பேர் தேவை. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த ஆட்களை வைச்சிட்டா இருப்போம். அவங்களை அனுபிச்சிடுவோமே. அதுக்காக இந்த பதவியில இருக்கிறவங்கயெல்லாம் சமையல்காரங்க, வேலைக்காரங்கன்னு சொல்றேன்னு நினைக்காதீங்க. அதுமாதிரிதான் தேவைப்படுகிற அளவு ஆட்களை மட்டும் நிர்வாகிகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே முதல் அரசியல் மாற்றம் என்கிறேன்.

எல்லா அரசியல் கட்சியிலும் ஐம்பது, ஐம்பத்தைந்து அறுபது வயசுக்கு மேலே உள்ளவங்கதான் இருக்காங்க. அதுக்கு கீழே உள்ளவங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு அவர்கள் குறைவு. அதுமட்டுமில்லை பதவிகளை அவங்களுக்குள்ளே மாத்திக்கிறாங்க. புதியவங்க அந்த அளவிற்கு அரசியலுக்கு வருவதில்லை. அரசியல் என்றாலே சாக்கடை என்று இளைஞர்கள் ஒதுங்கி இருக்காங்க. இளைஞர்களுக்கு அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது. அப்படி கிடைக்கனும்னா அவர் எம்பி மகனாவோ எம் எல் ஏ மகனாகவோ அள்ளது வேறு எதோ அதிகாரத்தில் உள்ளவர் மகனாகவோ இருந்தால்தான் அவர் பதவிக்கு வரமுடியும்.

ஆனால் என்னுடைய கட்சியில் 60 லிருந்து 65 சதவிதம் 50 வயசுக்கு கீழே உள்ளவனா இருக்கனும் ஓரளவு படிச்சிருக்கனும். அவங்க பகுதியில நல்ல பெயர் எடுத்திருக்கனும் அந்த மாதிரி ஆட்களுக்கு நான் சீட் கொடுக்கனும். 35 லிருந்து 40 சதவிதம் வேறு கட்சிகளில் நல்ல வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிற நல்லவங்க வந்து சேருகிறவங்க, 35 லிருந்து 40 சதவிதம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் சமுதாயத்தில் நல்ல பெயர், புகழோடு இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் வீட்டுக்கு நானே போய் சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது அதை சரி செய்திடலாம் வாங்க’னு சொல்லி அவங்களை அழைப்பேன்.

இந்தமாதிரி சக்தி, புது வெள்ளம், புது ரத்தம் அது சட்டமன்றத்துக்குள்ளே போயிட்டு ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கனும். அதுக்கு இந்த ரஜினிகாந்த் ஒரு பாலமாக இருக்கனும். நான் 45 வருஷம் இந்த சினிமா துறையில் உழைச்சிருக்கேன். அதில் கிடைத்த பெயர், புகழ், நல்ல அன்பு நல்ல நம்பிக்கை இதுக்கு உதவும் என நான் நம்புகிறேன்.

இந்தியாவில் தேசிய கட்சிகளை தவிர எல்லா மாநில கட்சிகளிலும் ஆட்சிக்கு அவர்தான் தலைவர் கட்சிக்கும் அவர்தான் தலைவர். முதலமைச்சரும் அவர்தான் கட்சிக்கும் அவர்தான் தலைவர். இப்படி இருக்கிற அரசாங்கத்தில் மக்கள் கேள்வியே கேட்க முடியாது. கட்சியில் கேள்வி கேட்டால் அவனை தூக்கி அடித்துவிடுவார்கள். அல்லது கட்சியைவிட்டே நீக்கிவிடுவார்கள். ஏன் என்றால் அவர்தானே கட்சித்தலைவர். ஆக கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை.

கட்சி என்பது கொள்கைகள்தான் கட்சி. கொள்கைகளை வைத்து வாக்குறுதி கொடுக்க வேண்டும். அதை வைத்து தேர்தலை சந்திக்கிறோம்.அதுக்குத்தான் ஜனங்க ஓட்டு போடுறாங்க. அந்த அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். அனுபவம் உள்ள உறுப்பினர்களை வைத்து ஒரு குழு அமைக்க வேண்டும். அதில் கட்சித்தலைவனே ஒரு தலைவனாக இருந்து முடிவெடுக்க கூடிய வாக்குறுதிகளை அரசு செயல்படுத்த வேண்டும். ஆட்சியாளர் வேலை என்பது ஒரு சிஏஓ வேலை போன்றது.

அப்போ ரஜினிகந்த கட்சித்தலைவரா ஆட்சித்தலைவரா அப்படின்னு கேள்வி வரும். எனக்கு இந்த சிஎம் போஸ்ட் என்பதை நான் எப்போதுமே நினைச்சுக்கூட பார்த்தது கிடையாது. சிஎம்யை என்னால நினைச்சு கூட பார்க்கவே முடியாது. அது என்னுடைய ரத்ததிலே வரலை. அது எனக்கு தெரியாது. என்னை சி எம் ஆக்கிறதுக்கு பிஎம் யே ரெண்டுவாட்டி கூப்பிட்டு கேட்டாங்க. மூப்பனாரு, சிதம்பரம், சோ னு யார் யாரெல்லாமோ சொன்னாங்க. நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா அவ்வளவுதான் நான் கட்சித்தலைவனாகத்தான் இருப்பேன்.

ஒரு கட்சித்தலைவனாக இருந்து ஒரு நல்ல இளைஞனா, படித்தவனா, நல்ல சிந்தனை உள்ளவனா, தொலைநோக்கு பார்வை உள்ளவனா அன்பு கொண்டவனா பாசம் கொண்டவனா, தன்மானம் உள்ளவனா, அவரைத்தானே இங்கே உட்கார வைப்போம். வெளியில இருந்தா ஆளை கொண்டு வருவோம்? அதன்பிறகு எதிர்கட்சிமாதிரி கேள்வி கேட்போம். எந்த தப்பு செய்தால் கூட சுட்டிக்காட்டுவோம். யார் தப்பு செய்தாலும் அதை திருத்துவோம். அப்படியில்லை என்றால் தூக்கி எறிவோம். அதே நேரத்தில் அவர்களின் அன்றாட பணிகளில் நாம் தலையிட மாட்டோம். ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களை எந்த பவர் செக்டாரும் டிஸ்டம் செய்யாது அதை நம்ம பார்த்துக் கொள்வோம்.

முக்கியபிரமுகர்கள் பிறந்த நாள், நினைவு நாட்களில் சிலைக்கு மாலை போடுவது போன்ற நிகழ்ச்சியில் கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் என்னுடைய திட்டம். மக்கள் மாற்று அரசியலை விரும்பி இருப்பதால் இதை மக்கள் விரும்புவாங்க என்று நம்பிக்கையில் இருந்தேன்.

என்னைப்பொருத்தவரை சினிமா கதையையே பலபேருகிட்டே சொல்லி கருத்து கேட்பேன்.இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை. இதையும் அப்படியே சொல்லமுடியாது. சொன்னா எப்படி எப்படி வெளியில போகும்னு தெரியாது. அதனால அதை எனக்குள்ளேயே வைச்சிருந்து தேர்தல் நேரம் நெருங்க நெருங்க சில இளைஞர்கள், சில அரசியல்வாதிகள், சில எம்.பிக்கள் சில பத்திரிக்கைகாரங்க,சில அரசியல் விமர்சகர்கள், சில ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் இவர்களிடம் சொன்னேன்.

சில அரசியல்வாதிகள் இந்த மூன்று திட்டதையுமே ஒத்துக்கலை. நீங்க கட்சி பதவியே இல்லைன்னு சொல்றீங்க பதவியே இல்லைன்னு சொன்னா யாரு வருவாங்கன்னாங்க. பதவிக்காக வர்றவங்க வேண்டவே வேண்டாம். பொது சேவைக்கா வர்றதாக இருந்தால் ஓகே. இல்லைன்னா வேண்டவே வேண்டாம். ஐம்பது வயசுக்கு மேலே உள்ளவங்க வேண்டாம்னு சொல்றீங்க உங்க மன்றத்திலே ஐம்பது வயசுக்கு மேலே உள்ளவங்கதானே நிறைய இருக்காங்க என்கிறார்கள்.

நானும் ஐம்பது வயதுக்கு மேலே என்பதால்தானே பதவி வேண்டாம்னு சொல்றேன். அப்படின்னா நீங்களும் வேண்டாம்னு சொல்றதுதானே ஒழுக்கம். நாட்டுக்கு நல்லது நடக்கனும்னு சொன்னா நீங்களும் உட்காரனும்.

மூன்றாவது திட்டத்தை யாருமே ஒத்துக்கவே இல்லை. நீங்க சி எம் இல்லைன்னு சொன்னா விட்டுடுங்கங்றாங்க. இளைஞர்கள் சில பேர் ஒத்துக்கிறாங்க அவ்வளவுதான். உங்களை விரும்புறவங்க ஒத்துக்க மாட்டாங்க, ஜனங்களும் ஒத்துக்க மாட்டாங்க. அது பழகிடிச்சு. கட்சித்தலைவர்தான் முதல்வராகனும்னு இப்போ எதிர்பார்க்கிறாங்க. கட்சித்லைவரைத்தான் முதல்வராக பார்க்க விரும்புவாங்கங்கிறாங்க. இந்த அழகு பார்க்கிறது என்பது எனக்கு அரசியலில் பிடிக்காத ஒன்று. எம்.பியா, எம்.எல்.ஏவா, மினிஸ்டரா அழகுபார்க்கனும்ங்கிறாங்க.

இதெல்லாம் கேட்கும்போது எனக்கு தூக்கி வாரிப்போட்டுடிச்சு. இவ்வளவு நாட்கள் இதைத்தானே நினைச்சிக்கிட்டிருந்தோம். உடனே மாவட்ட செயலாளர்களை கூப்பிட்டேன். இது குறித்து கருத்து கேட்டேன். சிலர் அதை கேட்கவில்லை. அது எனக்கு பிடிக்கவில்லை. தலைவர் சொல்றதை கேட்பவன்தான் உண்மையான தொண்டன். அதான் எனக்கு அதிர்ப்தியை ஏற்படுதியது. அதனாலதான் வெளியில் வந்து அப்படி சொல்லிவிட்டு போனேன்.

இப்போ நான் இப்படி சொல்றதால என்னவோ இப்போதுதான் முதல்வர் பதவியை தியாகம் செய்வது போல நினைக்க கூடாது. 2017 லேயே நான் சொல்லியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை மாற்று அரசியல் வேண்டும். நல்ல மாற்று அரசியலை கொண்டு வருபவன் தான் நல்ல தலைவன். அண்ணா சொன்னார், ‘தம்பி வா தலைமையேற்ற வா’ என்று அப்படி அவர் உருவாக்கிய தலைவர்கள்தானே இப்போயெல்லாம் இருக்கிறார்கள்.

இப்போவே இதையெல்லாம் ஏன் சொல்றாங்க. கட்சியை ஆரம்பித்தபிறகு சொல்ல வேண்டியதுதானேனு கேட்கலாம். நான் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட விரும்புகிறேன் அவ்வளவுதான். நான் சொல்றதில் சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம். அந்த வகையில் எனக்கு வருத்தம்தான்.

கட்சியை பதிவு செய்து, பெரிய மாநாட்டை கூட்டி, அதில் கட்சி பெயரை சொல்லி கொடியை உருவாக்கி ஆரம்பிக்கலாம். நாம் எதுக்கிறது யாரை இரண்டு பெரிய சாம்பவான்களை அசூரபலத்தோடு இருக்காங்க. ஒருபக்கம் பாத்தீங்கன்னா பத்து ஆண்டுகள் ஆட்சியிலே கிடையாது. மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர் இப்போ இல்லை. அவருடைய வாரிசு நிருபிக்கனும் அந்த நிர்பந்தம். வாழ்வா சாவா பணபலம் நிர்பந்தம். ஆள்பலம் கட்டமைப்பு. எந்த யுக்தியோடும் பண்ணுவாங்க. அவங்களை சந்திக்கனும்.

இன்னொருபக்கம் ஆட்சியை கையில் வைச்சிக்கிட்டு அந்த குபேரனுடைய கஜானாவையே கையில் வைச்சிக்கிட்டு அப்படியொரு கட்டமைப்பு. அவங்க காத்துக்கிட்டிருக்காங்க. நடுவுல நான் ஒரு சினிமா புகழை வைச்சிக்கிட்டு நம்ம ரசிகளை வைச்சிக்கிட்டு ஜெயிக்க முடியுமா?. இப்போ கொள்கைகளை சொன்னா இவங்களையெல்லாம் நான் பழிகடா ஆக்கமாட்டேன்?

தேர்தல்னா சாதாரன விசயமா சொல்லுங்க? எல்லாத்தையும் விற்று அதுலபோட்டபிறகு சொல்றது சரியாக இருக்காது. அதனால்தான் முதல்லே நான் சொல்றேன். நான் ஒதுங்கிடலாம்ன்னு சொன்னா அரசியலுக்கு வருவேன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டாருன்னு சொல்லுவங்க. பலபேரு பலவிதமா பேசுவாங்க. கோழன்னு சொல்லுவாங்க பயந்துட்டான்னு சொல்லுவாங்க. அப்படியெல்லாம் கெட்டபெயர் வருமேன்னு சொல்லிட்டு இறங்கினால்கூட இந்தமாதிரியெல்லாம் சந்திக்க வேண்டியது இருக்கு.

அதனாலதான் நான் முதல்லேயே உங்க கிட்ட சொல்லிடுறேன். இப்பவே உங்க கால்ல விழுறேன். இங்கே மிகப்பெரிய வெற்றிடம் இருக்கு. இரண்டு பெரிய ஆளுமை கிடையாது. தி.மு.கவுக்கு ஓட்டுபோட்டாங்கன்ன எழுபது சதவிதம்பேர் கலைஞருக்காக போட்டாங்க. அதிமுகவில் அப்படிதான் எழுபது சதவீதம்பேர் ஜெயலலிதாவுக்காக போட்டார்கள்.

இந்த இரண்டு ஆளுமைகள் இப்போ இல்லை. இதுதான் வெற்றிடம். இதுதான் நேரம், 54 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிற ஆட்சியை அகற்றுவதற்கு. இதில் ஜனங்க யோசித்து பார்க்க வேண்டும். இது அரசியல் மாற்றம். ஆட்சி மாற்றம் இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை அவங்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியலுக்கு வாங்க வாங்கனு சொன்னீங்க. ஆமா இப்படித்தான் வர்றேன்.

நாடுமுழுவதும் இளைஞர், ஜனாங்க மத்தியில் ஒரு எழுச்சி உருவாக வேண்டும். அப்படி எழுச்சி உருவாகினால் இந்த யானை பலம், அசூரபலம், பணபலம் எதுவுமே நிற்காது தூள் தூளாயிரும். அதைத்தான் நான் விரும்புறேன். அந்த ஒரு அலை அந்த ஒரு மூவ்மெண்ட் உண்டாகனும். அது உண்டாகும்னு சொல்லி நான் நம்புறேன். இந்த தமிழ் பூமி புரட்சிகளுக்கு பெயர்பெற்றது. காந்தியடிகள் இங்கே வந்துதான் உடைகளை தூக்கிபோட்டுவிட்டு அரையாடை ஆனார்.

விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து இந்த மண்ணில்தான் நூறு இளைஞர்களை கொடுங்க இந்தியாவின் தலையெழுத்தயே மாத்துறேன் என்று கர்ஜித்தார். இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது இங்கே மட்டும்தான் மாநில கட்சி ஆட்சி புரிந்த மண் இது. வேலூரில் ஒரு புரட்சி நடந்தது. அந்த புரட்சி மீண்டும் இந்த மண்ணில் நடக்க வேண்டும். மக்கள் அதை செய்து காட்ட வேண்டும். எல்லாரும் நல்லா இருக்கனும் எல்லாருடை சந்ததியர் நல்லா இருக்கனும் அதுக்கு பத்திரிக்கையாளர்கள் முதல்ல நீங்க ஒத்துமையா இருக்கனும். நீங்க படிச்சவங்க இதை பாமர மக்கள்கிட்ட எடுத்து சொல்லனும்.

ஐம்பது சதவிதம் ஓட்டுபோடுகிற பெண்களுக்கு இருபது சதவிதம்தான் எதுக்காக ஓட்டுபோடுகிறோம்னு விபரம் தெரிஞ்சு ஓட்டு போடுறாங்க. முப்பது சதவிதம் எதுவுமே தெரியாம ஓட்டுபோடுறாங்க. அதனால்தான் நான் சொல்றேன் மக்கள் மனதை மாத்தனும்னு.

பத்திரிக்கைகள் அறிவு ஜீவிகள் நீங்கல்லா உணரனும் சொல்லனும் தயவு செய்து. இதை ரஜினிக்காக செய்றதில்லை. தமிழ்நாட்டுக்காக தமிழ்மக்களுக்காக இந்த அதிசய புரட்சி வெடிக்கனும். நான் ஒரு தும்புதான். இது நடக்கலைன்னு வைச்சுகங்களேன். சும்மா நானும் வர்றேன் அரசியலுக்கு 15 சதவிதம் 20 சதவிதம் சும்மா ஓட்டை பிரின்னு. இதுக்கு நான் பொறுப்பா?. தேவைகிடையாது அதுக்கு கவலையும் படவில்லை.

அதுவும் இந்த ஒரே ஒரு ஜான்ஸ்தான் நான் என்ன நாற்பத்தி நான்கா 55 நான்கா? இப்போ விட்டா பிடிக்கிறதுக்கு எம்பத்தி ஒண்ணு. புழைச்சி வந்திருக்கேன் உடல்ல ஆயிரம் பிராக்ஸ்ல்லாம் இருக்கு. ஓகே இப்ப விட்டா அடுத்து தேர்தலின்போது 76 வயசு. இப்பவே ஏத்துக்காதவங்க அப்போ எப்படி ஏத்துக்குவீங்க?

இந்த விசயத்தில் சும்மா சி எம் சி எம்னு சொல்லாம மூலை முடுக்கெல்லாம் இதை சொல்லுங்க. அந்த எழுச்சி எனக்கு தெரியட்டும் அப்போ வர்றேன். இந்தமாதிரி இந்தியா முழுக்க பரவனும். கட்சி பதவியில் உள்ளவை தூக்கனும். புதுசா நாற்பது நாற்பத்தி ஐந்து வயது இளைஞர்கள் வரனும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கனும். கட்சி வேறு ஆட்சி வேறு அது நடக்கனும் அதை எதிர்பாக்கிறேன். உங்க கையில்தான் இருக்கு அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை’’ என்று வேகமாக பேசிமுடித்தார் ரஜினி.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ரஜினி, சரியான மக்களுக்கு சரியான தலைவரா சரியான தொண்டனுக்கு சரியான தலைவரா இருக்க விரும்புகிறார். இப்போதுள்ள அரசியல் ஆடுபுலியாட்டத்தில் தனது கொள்கை கோட்பாடுகளை இரண்டு ஜாம்பவான்கள் மத்தியில் எப்படி வெற்றியடைய செய்யப்போகிறோம் என்கிற அச்சம் உள்ளுக்குள்ளே இருப்பதை பார்க்க முடிகிறது.

ஆனாலும் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதுபோன்ற மாற்றம் வரவேண்டும் என விரும்புகிறார். அவரின் அக்கறை வரவேற்கதக்கதுதான். அதேநேரத்தில் இனிவரும் காலங்களில் ரஜினி லைவ் அரசியல் செய்ய வேண்டும். அதிகாரம் வந்தால்தான் நியாத்தை சொல்லமுடியும். அதிகாரம் இல்லாமல் சொன்னால் அந்த வார்த்தைக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என ரஜினி யோசிக்கிறார். அது ஒருவகையில் சரியென்றாலும் முயற்சிதானே திருவினையாக்கும்.

சரியான வார்த்தையும் நேர்மையா முன்னெடுத்தலும் தன்னை வெற்றி பெற செய்யும் என நம்பி அரசியலுக்கு இசைந்த ரஜினிக்கு இப்போதுதான் உண்மையை தாண்டி நியாயத்தை தாண்டி சில உண்மைகள் இருக்கிறது என புரிந்து கொள்ளமுடிந்திருக்கிறது. இதுவரை மற்றவர்கள் போல் ‘பாதிக்கப்படுபவராக இருந்தாலும் அவர் தவறு செய்பவராக இருந்தால் அவருக்கு ஆதரவாக பேசமாட்டார்’ அதுதான் சரி அதுதான் வெற்றி பெற செய்யும் என நம்பிக் கொண்டிருந்தார்.

ஆனால் நியாயத்துக்கு எதிராக இருந்தாலும் பாதிக்கப்படுகிறோம் என கதறுவோருக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலை அரசியலில் இருக்கிறது என்பதை சமீபகால சில சந்திப்புகள் அவருக்கு உணர்த்தியிருக்கிறது. அப்படிபட்ட சூழ்நிலையில் நியாயத்தை நேர்மையை மட்டும் சொல்ல விரும்பும் தன்னால் அரசியல் நடத்த முடியாது. அத்தனை அதிகாரத்தோடும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தன்னால் அப்படிபட்ட ஆட்சியை கொடுக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்.

அதனால்தான் முதலில் நல்ல கட்டமைப்பை உருவாக்கும் திட்டங்களை சொல்லியிருக்கிறார். அந்த திட்டங்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமானால் அவர் நினைப்பதுபோல் ஆட்சி அமைக்க முயற்சி எடுப்பார். முடியாத பட்சத்தில் எதிர்காலத்திலாவது இந்த யோசனையை பின்பற்றுங்கள் என சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்வார் என்றே தெரிகிறது.

அல்லது இடையில் வரக் கூடிய சட்ட மன்ற தேர்தலில் தன்னுடைய கொள்கையை வரவேற்கிற கட்சிக்கு ஆதரவை தெரிவித்துவிட்டு அமைதியாகிவிடுவார். எல்லாம் மக்களிடம் ஏற்படுகிற எழுச்சியை பொறுத்தே ரஜினியின் அரசியல் அமையப்போகிறது. அதற்காகத்தான் எழுச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசியிருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

அந்நியர் நம் நாட்டுக்குள் நுழையும் போது நம்மவர்கள் வேடிக்கை பார்த்ததினால்தான் நம் தேசம் அடிமையானது. அதை மீட்க எத்தனையோபேர் முயற்சி செய்துதான் மீட்டனர். அதுபோல் சக்தி உள்ளவர்கள் முயற்சி செய்தால்தான் நம்மிடையே மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு நேர்கொண்ட பார்வை மட்டும் போதும். இடைமறிப்போரை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அரசியலை வியாபாரமாகவும் தொழிலாகவும் நடத்திகொண்டிருப்போறிடமிருந்து நாட்டை காப்பாற்ற மாற்றங்கள் அவசியம் என்பதை ரஜினியின் கருத்துக்கு நாமும் ஆதரவு கொடுப்போம் ! -nadunilai.com R.S.சரவணப்பெருமாள் : 8056585872

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here