இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று சொன்னால்.. மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று அர்த்தம் இல்லை..

0
83
sukashini

ஒருவர் ஒரு கருத்தை சொன்னால், அதை திரித்து பேசுவதில் நம்மவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு நாடு முழுவதும் அவர் எதோ பெரிய கொலைக்குற்றம் செய்துவிட்டது போல் எதிர்ப்பு கொடுத்தனர். அப்படியே எடுத்துக் கொண்டாலும் அவர், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் அம்சத்தை மையமாக வைத்துதான் பேசியிருந்தார். இது போன்ற பிரச்னைகளை சிலர், மத்திய பாஜக அரசுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்றே தெரிகிறது.

இந்தநிலையில் நடிகை சுஹாசினி, இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். இதை எதோ பெரிய குற்றம் போல் சிலர் வெகுண்டு எழுந்திருக்கிறார்கள். எந்த சூழ்நிலையில் அவர் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. இதுபோன்ற கருத்து சர்ச்சையாகும் என்பதால் அதை அவர் தவிர்த்திருக்கலாம். அதேவேளை, அது அவருடை பார்வை. அதை குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை. இந்தி பேசுபவர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்றோ, மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றோ அவர் கூறவில்லை. ஆனால் அமிர் என்கிற சினிமா இயக்குநர் அதை குறிப்பிடுகிறார்.

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றால், தமிழ், மலையாளம், கன்னடம் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா என்பதை சுஹாசினி விளக்க வேண்டும் என்கிறார். ஒரு பொருள் நல்லதாக இருக்கிறது என்று சொன்னால், அப்படியானால் மற்ற பொருள்கள் எல்லாம் கெட்ட பொருளா என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?. இதற்கு பெயர்தான் அதிகார தோரணை என்பார்கள். யாரையும் இதுபோன்று பேசவிட கூடாது என்று அச்சுறுத்தும் செயலாகவே இவரின் கருத்தை பார்க்க முடிகிறது.

மேலும் அமீர், இந்த மண்ணில் ஆழமாக ஆரியம் வேரூன்றி வருகிறது. அது மிகவும் ஆபத்தானது. அதுதான் இதுபோன்ற புதிய புதிய கருத்துக்களை கொண்டு வருகிறது. மருத்துவ கல்லூரி ஒன்றில் சமஸ்கிருதம் உறுதி மொழி எடுத்துள்ளனர். இந்த சமஸ்கிருதத்தை எல்லாம் உடைத்து ஒழித்துதான் நாம் தமிழை முன்னிலைப்படுத்தி வருகிறோம். இந்தி திணிப்பு இனியும் செல்லாது. ஆனால் மறுபடியும் இவர்கள் பழைய முறையை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அதனால்தான் இந்தி மொழி நல்ல மொழி. இந்தி பேசாதவர்கள் நாட்டில் இருக்க கூடாது போன்ற வார்த்தைகள் வருகிறது. என் நாட்டில் இருந்து கொண்டு என்னையே வெளியேற சொல்கிறார்கள். முதலில் நீங்கள் வெளியேறுங்கள். இந்தி திணிப்பை செய்யும் நீங்கள் என் தேசத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று நான் சொல்கிறேன்’’என்று கூறியிருப்பதாக ஆளும் கட்சி பத்திரிக்கையான தினகரன் நாளிதழில் செய்தி வெளிவந்திருக்கிறது.

இந்த மண்ணில் ஆரியம் வேரூன்றுவது யாருக்கு ஆபத்தோ அவர்கள்தான் அஞ்சவேண்டும். தமிழ் மக்கள் எல்லோரும் எதற்காக அஞ்ச வேண்டும்?. நாயன்மார்கள்,ஆழ்வார்கள், சித்தர்கள் வாழ்ந்த பூமியை இடையில் வந்த பெரியாரின் மண் என்று இவர்கள் சொல்லிவிட்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ஆன்மிக பூமியான தமிழ் மண்ணை ஆன்மிகத்தை வெறுத்தவின் மண் என்று யார் யாரோ சொல்கிறார்கள் என்றால் அதை அப்படியே அனைவரும் ஏற்பார்கள் என்று எத்தனை காலம் இவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று தெரியவில்லை.

மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதம் மொழியில் உறுதி மொழி எடுக்க கூடாது என்றால் தமிழ் மொழியில் உறுதி மொழி எடுக்க வேண்டியதுதானே. கிரேக்கரின் ஹிப்ரோகிராடிக் உறுதி மொழிதான் எடுக்க வேண்டும் என்று எதற்காக கட்டாயப்படுத்த வேண்டும். கிரேக்க மருத்துவர் லெவலுக்கு தமிழகத்தில், இந்தியாவில் மருத்துவ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கு மருத்துவ வல்லுநர்கள் இதுவரை உருவாகவில்லையா?. பல முறை மாற்றியமைக்கப்பட்டதுதான் ஹிப்ரோகிராடிக் உறுதிமொழி. அது மட்டும்தான் உலகில் உயர்ந்தது என்றோ, நம் நாட்டில் அதுபோன்ற மனிதநேய மருத்துவர்களே இதுவரை உருவாகவில்லை என்று தமிழக அரசு சொல்கிறதா? அந்த அளவிற்கு கூட தமிழக மருத்துவ துறையினர் வளரவில்லையா?

எது எப்படியோ உள்நாட்டுக்காரன் சொல்வதைவிட அந்நியன் நாட்டுக்காரன் சொல்வது மட்டுமே வேத மந்திரம் என்று அந்நிய அடிமைகளாக எத்தனை காலம்தான் இந்த தமிழக அரசியல்வாதிகள் இருக்கப்போகிறார்கள்? மாணவர்களுக்கு புத்தி சொல்ல இவர்களுக்குதான் அறிவு இல்லை என்றால் இதுவரை இந்தியாவில் ஒருவருக்கு கூட அறிவு இல்லையா?.

சமஸ்கிருதத்தை உடைத்து ஒழித்துதான் தமிழை முன்னிலை படுத்தி வருகிறோம் என்கிறார். தமிழை காப்பாற்ற இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் ஒழிப்பதாக சொல்லும் இவர்கள், ஆங்கிலத்தால் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது என்பதைமட்டும் கவனிக்க மறுக்கிறார்களே எதற்காக?. இப்படி கூறுவது ஆங்கிலத்தை எதிர்க்க வேண்டும் என்கிற அர்த்தம் அல்ல. அந்நிய மொழியான ஆங்கிலம் ஒரு வகையில் பயன்படுகிறது என்கிறபோது இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளும் இந்தியர் நமக்கும் பயன்படத்தான் செய்யும். எதோ சிலபேர் இந்தி பேசாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டால் அதையே அனைவரும் சொல்கிறார்கள் என்று அர்த்தமா?.

இந்தியை எதிர்ப்பது, சம்ஸ்கிருதத்தை எதிர்ப்பது, தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது, நீட் தேர்வை எதிர்ப்பது எல்லாம் தேசியத்தை எதிர்ப்பதற்காக என்றுதான் பார்க்கமுடிகிறது. எதிர்வரும் காலங்களில் தேசியத்தை எதிர்ப்பவர்களை தமிழ் தேசிய பூமி ஆதரிக்காது என்கிற சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே தமிழை பாதுகாக்கிறோம், தமிழுக்காக உயிரை கொடுக்கிறோம் என்று பேசிக் கொண்டு இந்திய தேசியத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள்.

இனிவரும் காலங்களில் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தமிழ் கலாச்சாரம், பண்பாடுகளை பாதுகாத்து வளர்க்கும் தேசிய நோக்கம் கொண்டவர்களை மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள். இதனை தமிழக அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, திரைப்படத்துறையினரும் உணர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here