தனிமனித ஒழுக்கம் வளர்ப்பதே அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு.!

0
49
nadunilai.com

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும், மாணவர் சமூகத்தில் நடைபெற்று வரும் குற்றங்களையும் பார்க்கும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

தங்கங்களே நாளைய தலைவர்களே..தேசம் காப்பவர்கள் நீங்கள்.. என்று சிவாஜிகணேசன் படத்திலும், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்று எம்.ஜி.ஆர் படத்திலும் பாடல்கள் இருக்கிறது. ஒரு மாணவனின் எதிர்காலம் என்பது ஒரு நாட்டின் எதிர்காலம் ஒரு சமூகத்தின் எதிர்காலம் என்று கருதப்படுகிறது. உயர்வான இடத்தில் நாடோ, வீடோ சமூகமோ செல்ல வேண்டும் என்றால் அது மாணவ பருவத்திலேயே பட்டைதீட்டப்பட வேண்டும்.

அதை வைத்துதான் மாணவ பருவத்திற்கு அவ்வளவு மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது. இப்பவும் அப்படியே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பள்ளி பருவத்தில் நல்லொழுக்கத்தை போதிக்கும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதில் மாணவன் ஒருவன் எப்படியெல்லாம் உடையணிய வேண்டும்?. எப்படியெல்லாம் முடி வெட்ட வேண்டும்?. எப்படியெல்லாம் தினசரி பணியை அமைத்துக் கொள்ள வேண்டும். தாய், தந்தை, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள்,மற்றவர்கள் எல்லோரிடமும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படும். பிஞ்சு வயதில் சொல்லப்படும் அந்த வார்த்தைகள், ஆயுள் முழுவதும் அவர்கள் கடைபிடிக்கும் வகையில் அமையும்.

நீதிபோதனை செய்வதற்காக நல்ல கருத்துக்களை தேடி மேலைநாடு போகவேண்டியதில்லை. நம் நாட்டிலேயே நமது மூதாதையர் நல்ல பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அதை போதித்தாலே போதும். யார் கருத்துக்களை போதிப்பது என்கிற போட்டியில்தான் கடந்த காலங்களில் போதனை வகுப்புகளே கைவிடப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

இடையில் தனிமனித உரிமை பற்றி பேசுபவர்கள் உருவானார்கள். அவர்கள் மூலம் தனிமனித ஒழுக்கம் காற்றில் பறந்துவிட்டது. இந்திய மற்றும் தமிழ் கலாசாரத்தில் இருந்து தமிழனை பிரிக்க வேண்டும் என நினைத்தவர்கள் அதிக அளவில் தனிமனித உரிமை குறித்து பேசினார்கள். தனிமனித ஒழுக்கம் குறித்து பேசுவோர் அவர்களுக்கு எதிரி ஆனார்கள். திட்டமிட்டு பரப்பிய தனிமனித சுதந்திர கோஷம் தனிமனித ஒழுக்கத்தை முற்றிலும் அழித்து ஒழித்தது. கட்டாயமாக கடைபிடிப்போர் மத்தியில் மட்டுமே இன்னமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்த மாணவனையோ எந்த இளைஞனுக்கோ யாரும் புத்தி சொல்லும் அளவில் நிலமை தற்போது இல்லை. அதை ஏற்கமுடியாத மனநிலைக்கு சென்றிருக்கிறது இன்றைய இளைய சமூகம்.

தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்காத சமூகத்தில் ஆயிரம் தண்டனை சட்டங்கள் போட்டு தடுத்தாலும் குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். சட்டத்திற்கு பயந்து குறிப்பிட்ட சதவீதம் மக்கள் அடக்கி வாசிப்பார்கள். சட்டத்தை குறுக்கு வழியில் வளைக்கும் வல்லமை பெற்றவர்கள் எதையும் கண்டு அஞ்சமாட்டார்கள். அதேவேளை, இது தவறு, இது பாவம், அடுத்தவர்களுக்கும் மனது, உயிர், ஆசை, பாசம் என்பதெல்லாம் உண்டு என்று உணரும் பாடம் படித்தவன், ரோட்டில் நடந்து செல்லும் பெண்ணை கீழே தள்ளி விட்டு நகைகளை களவாடமாட்டான். வயது வித்தியாசம் பார்க்காமல் பெண்களை பலாத்காரம் செய்யமாட்டான்.

சொத்திற்காக பெற்ற தாயை, தந்தையை,சகோதரனை கொல்ல மாட்டான். தாய் அளவிற்கு அடைக்கலம் கொடுத்தவர்களையே நன்றி விசுவாசம் இல்லாமல் கொல்லமாட்டான். இப்படி ஒவ்வொரு அதர்ம காரியமும் தர்மம் அறியாத நிலையில்தான் நடக்கிறது. தர்ம சிந்தனை வேண்டும் என்று சொல்வோரை கடந்த சில காலமாக சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் எள்ளி நகையாடி விளம்பரம் செய்துவிட்டன.

இப்போது யாரும் தர்ம சிந்தனை குறித்து வெளியில் பேசுவது இல்லை. பேச முடிவதில்லை. நிலமை இப்படி இருக்கும்போது மனிதாபிமானமற்ற முறையில் தவறுகள் நடக்கிறது. அதை எந்திரமயமான சட்டத்தால் முழுமையாக தடுக்க முடியவில்லை.

எனவே ஒரு அரசு, நாட்டு மக்களுக்கு வசதி வாய்ப்புகளை வாரி வழங்கினால் மட்டும் போதாது. அவர்களை நல்வழிப்படுத்தவும் வேண்டும். நல்வழியை காட்டும் போதுதான் எதிர்காலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை வராது. ஒவ்வொரு இளைஞனும் திறமையானவனாக, ஒழுக்கமானவனாக வளர்ந்து வருவான். அவனிடம் லத்தியையோ, துப்பாக்கியையோ காட்டி அடக்க வேண்டிய அவசியம் வராது.

ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள் சிலர், கஞ்சா, மது உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகுவது மட்டுமல்ல, எத்தகைய தவறு செய்தாலும் குறிப்பிட்ட அளவிலான தண்டனைதானே என்று மழுங்கி போகும் பக்குவநிலை இருப்பதாக தெரிகிறது. அப்படிப்பட்ட மூர்க்கத்தனமான இளைய சமூகத்தை வளர்த்து என்ன செய்யப்போகிறோம்? அதை பீரேங்கி வைத்து தகர்த்தாலும் தகர்க்க முடியாது. எங்கள் நாட்டில் இளைஞர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் என்று பெருமை கொள்ள முடியாது. மூர்க்கத்தனமான இளைஞர்கள் அதிகமுள்ள நாடு என்று ஆனால் யாராலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. மக்களை கட்டுப்படுத்த முடியாத நாட்டின் நிலையை நினைத்து பார்க்க வேண்டும்.

எனவே இளைய சமூகத்தை நல்ல சமூகமாக வளர்க்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது வலியுறுத்தியதின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு, பள்ளியில் நீதிபோதனை வகுப்புகளை நடத்த முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படி செய்தால் நல்லோர் சமூகம் அரசை வாழ்த்தவும், ஆதரிக்கவும் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தனிமனித ஒழுக்கத்தை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளும் அரசை நாமும் என்றைக்கும் ஆதரிப்போம். ஏனென்றால் தனிமனித ஒழுக்கமே எல்லாவற்றிலும் மேலானது.

nadunilai.com A.R.S.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here