மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் ஆதீன மடம் இருக்கிறது. இது 16ம் நூற்றாண்டை சேர்ந்தது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஜபம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்திற்கு எழுந்தருளினார். அதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 26வது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 20ம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவமும், 21ம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.
பல்வேறு தமிழ் சைவம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. விழா நிறைவாக 11ம் நாள் திருவிழாவாக 22ம் தேதி ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே பட்டினபிரவேச நிகழ்ச்சியில் பாதுகாப்பு கொடுக்க, கோயில் நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.