தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவர் பதவி காலி – அ.தி.மு.க உறுப்பினர்கள் சேர்ந்து கவிழ்த்தனர்

0
15
thoothukudi district panchayath

திமுக ஆட்சி அமைந்ததுமே உள்ளாட்சி அமைப்புகளையும் தன்வசப்படுத்த வேண்டும் என்று திமுக கங்கணம் கட்டியது. அதற்காக காய் நகர்த்தி வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அதிமுக உறுப்பினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 17வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி சத்யா தலைவராகவும், முள்ளக்காடு செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆட்சி மாறிய நிலையில், கடந்த ஆண்டு துணைத்தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் திமுக பக்கம் சாய்ந்தனர்.

இதையெடுத்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்கிற முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. அது குறித்து மாவட்ட கலெக்டரிடம் உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.

இதன் அடிப்படையில், மாவட்ட தலைவரான சத்யா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் இன்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தற்போதைய தலைவர் சத்யா மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பிரியா, பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற 14 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தற்போதையை தலைவர் சத்யா தலைவர் பதவியை இழந்துள்ளார். கலெக்டர் செந்தில்ராஜ் மாவட்ட ஊராட்சி தலைவி பதவி காலியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதிமுவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத தீர்மானத்துக்கு திமுகவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறிய 4 பேர் என 9 பேர் தவிர, அதிமுகவில் 5பேர் வாக்களித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here