கலைக்கு விலை இல்லை.. காங்.எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ்க்கு பாடம் கற்பித்த கல்லூரி மாணவி..

0
19
uoorvasi news

விசித்திர செயலில் சிறந்து விளங்குபவர்கள், அவர்கள் செய்யும் செயலை ஒரு கலையாக, உயிருக்கு மேலாக நேசிப்பர். அதற்கு சன்மானம் என்பது பாராட்டும், அரங்கேற்றமும்தான். அவர்களின் கலைக்கு எந்த விலையும் கிடையாது. அப்படி அந்த கலை விலைபேசப்படும்போது அவர்கள் வெகுண்டெழுவார்கள் அல்லது உடைந்து அழுவார்கள். அது, எதிரே நிற்பவர்களின் அதிகாரத்தின் அளவை பொறுத்தது. அப்படித்தான் கல்லூரி மாணவி ஒருவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் வந்திருந்தார். அவரிடம், கல்லூரி மாணவி ஒருவர் தான் வரைந்து வைத்திருக்கும் படம் ஒன்றை கொடுத்தார். அதில் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜின் உருவம் அப்படியே வரையப்பட்டிருந்தது. தனது உருவத்தை மிக திறமையாக வரைந்த மாணவிக்கு எதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்த எம்.எல்.ஏ, மாணவியை பாராட்டியதோடு, பணமும் கொடுத்தார். அதனை சற்றும் எதிர்பாராத மாணவி பணத்தை வாங்க மறுத்தார். தொடர்ந்து வற்புறுத்தியதால் வாங்க மறுத்து அழுதுவிட்டார். சால்வை அணிவித்தும், தண்ணீர் கொடுத்தும் அம்மாணவியை சமாதானப்படுத்தினர். இந்த தகவல் தொலைகாட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

இச்செய்தியை பார்த்த அப்பகுதியில் சிலர், ‘’இந்த மாணவி மிகவும் திறமையானவர். அவர் இதற்கு முன்பு தொகுதி எம்.பியான கனிமொழியின் உருவத்தை அப்படியே வரைந்து, அங்கு வந்த கனிமொழியிடம் கொடுத்தார். அதனை வாங்கி பார்த்த கனிமொழி, மாணவியை வெகுவாக பாராட்டினார். அதை பெரிய ஊக்கமாக உணர்ந்த அந்த மாணவி, தொடர்ந்து இதுபோன்று படம் வரைவதை கலையாக கொண்டிருக்கிறார். இது போன்ற கலைஞர்களுக்கு பாராட்டும், வாய்ப்புமே பெரிய வெகுமதியாகும். எதற்கெடுத்தாலும் பணத்தை நீட்டும் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜுக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது போல. பணம் கொடுத்தால் மாணவி சந்தோஷப்படுவார் என்று நினைத்துவிட்டார். ஆனால் அந்த மாணவி, கலைக்கு விலை இல்லை என நிரூபித்துவிட்டார்.

மாணவிக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் மாணவியின் ஓவிய திறமைக்கு சரியான அங்கிகாரம் கிடைக்க எம்.எல்.ஏ உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு சுற்றி நிற்கும் கட்சிக்காரர்கள் வரிசையில் மாணவியையும் பார்த்தது தவறு. கலைக்கு விலை இல்லை என்று எம்.எல்.ஏவுக்கு பாடம் கற்றுக் கொடுத்துவிட்டார் அந்த மாணவி. இனிமேலாவது இது போன்ற கலைஞர்களை கண்டால் அவர்களுக்கான மரியாதை செலுத்துவதே மேலான வெகுமதி என்று எம்.எல்.ஏ மட்டும் அல்ல. இதுபோன்று பதவியில் இருப்பவர்கள் உணரவேண்டும்’’ என்றனர்.

இது குறித்து எம்.எல்.ஏ தரப்பில் விளக்கம் தெரிவித்தால் அதையும் இத்துடன் இணைத்து வெளியிட தயாராக இருக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here