அ.தி.மு.க மாவட்ட பஞ்.தலைவரை கவிழ்த்த விவகாரம் – தூத்துக்குடி அதிமுகவினர் 5 பேர் நீக்கம்

0
8
admk

தூத்துக்குடி மாவட்ட அதிமுக பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அதற்கு அதிமுக உறுப்பினர்களும் உடந்தையாக இருந்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 17வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி சத்யா தலைவராகவும், முள்ளக்காடு செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆட்சி மாறிய நிலையில், கடந்த ஆண்டு துணைத்தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் திமுக பக்கம் சாய்ந்தனர்.

இதையெடுத்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்கிற முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. அது குறித்து மாவட்ட கலெக்டரிடம் உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.

இதன் அடிப்படையில், மாவட்ட தலைவரான சத்யா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தற்போதைய தலைவர் சத்யா மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பிரியா, பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற 14 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தலைவர் சத்யா தலைவர் பதவியை இழந்தார். கலெக்டர் செந்தில்ராஜ் மாவட்ட ஊராட்சி தலைவி பதவி காலியாக உள்ளதாக அறிவித்தார்.

அதிமுவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத தீர்மானத்துக்கு திமுகவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறிய 4 பேர் என 9 பேர் தவிர, அதிமுகவில் 5பேர் வாக்களித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, அதிமுகவின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், அதிமுக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் மாவட்ட ஊராட்சியின் 12வது உறுப்பினராகவும் இருந்த எஸ்.அழகேசன்,

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளரும், மாவட்ட ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினருமான எஸ்.நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலாளரும், மாவட்ட ஊராட்சியின் 11வது வார்டு உறுப்பினருமான என்.சரஸ்வதி, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச்செயலாளரும், மாவட்ட ஊராட்சியின் 8வது உறுப்பினருமான எஸ்.தேவராஜ், சாத்தான்குளம் ஒன்றிய மகளிரணி செயலாளரும், மாவட்ட ஊராட்சி வார்டின் 17வது வார்டு உறுப்பினருமான எஸ்.தேவ விண்ணரசி ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

எனவே அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here