இந்தி படித்தவர்கள் தமிழகத்தில் பானிபூரிதான் விற்கிறார்கள் – ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா ?

0
8
minister ponmudi

பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியா என்கிற ஒற்றை வார்த்தையில் ஒன்றுபட்டு வலுவான தேசமாக விளங்கி வருகிறது பாரத தேசம். பாரதம் என்கிற ஒரே கருத்துள்ள இந்தியர்களின் உழைப்பால், அனைத்து துறைகளிலும் படுவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது இந்த தேசம். இதை பார்த்து பெருமை கொண்டே ஆகவேண்டும்.

அதேவேளை மொழி விவகாரத்தில் சில மாநிலங்கள் எப்போதும் மத்தியரசிடம் மல்லுக்கட்டி கொண்டேதான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் சிலர், ஒரு இந்திய மொழியை தேசிய அளவிலான மொழியாக ஏற்க தயாரில்லை. ஆனால் அவர்கள், அந்நிய மொழியான ஆங்கிலத்திற்கு அத்தனை மரியாதையும் கொடுத்து வரவேற்கிறார்கள். ஆங்கிலத்தை ஆதரிப்பதை யாரும் மறுக்கவில்லை. அது உலக அளவிலான தொடர்பு மொழியாக இருந்து வருகிறது. அதை ஆதரிப்பதில் தவறில்லை. அவசியம் என உணரப்பட்டிருக்கிறது.

அதேவேளை, இந்திய அளவில் ஒரு மொழியை தொடர்பு மொழியாக ஆக்க வேண்டும் என்று யாரும் கூறிவிட முடியவில்லை. எதோ பெரிய தவறான வார்த்தையை சொல்லிவிட்டதுபோல் சிலர் கொதித்துவிடுகிறார்கள். அரசியல் அமைப்பு சட்டத்தில் அதற்கான அம்சம் இருக்கிறது என்று தெரிந்தும் மறுக்கிறார்கள். ஒட்டு மொத்தவர்களும் எதிர்ப்பதுபோல் ஒரு பிம்பத்தை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், தேசிய அளவில் இந்திய மொழி ஒன்று இணைப்பு மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உள்பட தேசிய சிந்தனையாளர்கள் விரும்புவதுதான் உண்மை.

இந்தி மொழி நுழைந்தால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால், குக்கிராமம் வரை ஆங்கிலம் நுழைந்து தமிழை அழித்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவர்கள் பேசுவதில்லை. எதையுமே வேண்டும், வேண்டாம் என்பதை முடிவு செய்வது தனிமனித உரிமை. அதை திணிப்பது எப்படி தவறோ, அதுபோல் அதை தடுப்பதும் தவறுதான் என்கிற வாதம் தற்போது வலுப்பெற்று வருகிறது.

இதனை புரிந்து கொண்ட விதமாக நீண்டகாலமாக இந்தியை நுழைய விடவேமாட்டோம் என்று எதிர்ப்பு கொடுத்து வந்தவர்கள், அதிலிருந்து சற்று இறங்கி வந்து, இந்தி மொழி படிப்பதை தடுக்க வில்லை. அதை திணிப்பதுதான் தவறு என்கிறோம் என்கிறார்கள். மொழி விவகாரத்தில் தாய்மொழி தவிர, தேசிய அளவிலும். உலக அளவிலும் மொழிகள் தெரிந்திருப்பது நல்லது என்கிற எண்ணம் உலக மக்களிடையே பரவியிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும், தமிழ், ஆங்கிலம் தவிர வேறு எதையும் ஆதரிப்பதில்லை என்கிற முடிவில் சிலர் இருக்கிறார்கள். இந்திய அளவில் தேசம் ஒருமைப்பட்டுவிடுவதை இவர்கள் விரும்புவதில்லையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஆங்கிலேயர், அவர்கள் அடிமைபடுத்தி வைத்திருந்த நாடுகளில் உள்நாட்டு கலாசாரம் கலந்த மொழிகளை தேசியமயமாகாமல் தடுத்து வந்தனர். அதன் மூலமே அவர்களின் கலாசாரத்தை புகுத்தவும் நிலைநிறுத்தவும் முடியும் என கருதினர். அதைத்தான் தற்போது நம் தமிழக அரசியல்வாதிகள் சிலர் செய்து வருவதுபோல் தெரிகிறது. தமிழை வளர்ப்பதற்கு என்ன வழி என்று சொல்லாமல், இந்தி மொழியை தடுப்பதற்கு என்ன வழி என்று மட்டும் யோசிக்கிறார்கள். அதோடு நில்லாமல் இந்தி, சமஸ்கிருத மொழிகளை விமர்சிப்பதற்கும் தயங்குவதில்லை. மாநில அமைச்சர் ஒருவர் கூட அப்படியொரு விமர்சனத்தை செய்திருக்கிறார்.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் 37வது பட்டமணிப்பு விழாவில் பேசிய உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, ’’மாணவர்கள் தாங்கள் சார்ந்த துறையில் முன்னேற்றம் அடையவே முதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார். தமிழகத்தில் ஆண்களைவிட பெண்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். பெண்கள் படிக்கவே கூடாது என்று சொன்ன காலம் உண்டு. ஆனால், இன்று பெண்களை படிக்க வைக்கின்றனர். இதுதான் திராவிடமாடல். இதுதான் பெரியார் மண்.

தமிழகம் இந்திய அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. ஆண்கள், பெண்கள் என அனைவரும் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்திய அளவில் தமிழக 53 சதவீதம் உயர் கல்வியில் உயர்ந்து உள்ளோம். தமிழக முதல்வர் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கல்வித்துறை, தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து படிக்கும் போதே மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. இந்திக்கும் எதிரானவர்கள் இல்லை. படிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்தியை படிக்கட்டும். இரண்டுதான் கட்டாய மொழியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவதாக என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். மாணவர்களுக்கு இந்தி என்பது தேர்வு மொழியாகத்தான் இருக்க வேண்டும். அதனை கட்டாயமாக்கக்கூடாது. இதுதான் தமிழ்நாடு கல்வி கொள்கை குழு மூலம் செயல்படுத்தப்படும்.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் கூறினர். ஆனால், வேலை கிடைக்கிறதா? என்பதுதான் கேள்வி. இந்தி படித்தவர்கள் இங்கு பானி பூரிதான் விற்பனை செய்கின்றனர். நாங்கள் புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால், மொழியில் எங்கள் சிஸ்டத்தைதான் பின்பற்றுவோம். தமிழக முதல்வர், மாநில கல்வி கொள்கை அமைக்க ஒரு குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்த குழுவின் அடிப்படையில் கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும். கவர்னரிடம் எங்களின் உணர்வைதான் வெளிப்படுத்துகிறோம். அதனை புரிந்து கொண்டு கவர்னர் ஒன்றிய அரசிடம் எங்கள் நிலைபாட்டை விளக்க வேண்டும்.

மொழி விவகாரத்தில் எங்கள் பிரச்னை, மாணவர்கள் பிரச்னையை ஆய்வு செய்து நல்ல முடிவை கவர்னர் எடுக்க வேண்டும்’’ என்று பேசினார்.

தற்போது வடநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து தொழில் செய்வோரை வைத்து மட்டும் சிலர் இதுபோன்ற விமர்சனங்களை செய்கிறார்கள். கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து வடநாட்டிற்கு சென்றவர்கள் எதுமாதிரியான வேலை செய்து பிழைப்பு நடத்தினார்கள் என்று அவர்கள் விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட ஏரியாக்களில் பேப்பர், பழைய பொருட்களை பொருக்கும் வேலையில் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகாரர்கள் மட்டுமே அதிகம் இருந்தனர். அப்படியானால் வடநாட்டினர், தமிழர் முழுவதும் இப்படித்தான் என்று கணித்துவிட்டால் அது சரியாக இருக்குமா?

எந்த பகுதியில் எது கிடைக்கவில்லையோ அந்த பகுதியில் அந்த வியாபாரத்திற்கு மவுசு இருக்கும். அதை கருத்தில் கொண்டுதான் பிழைப்பிற்காக வியாபாரிகள் இடமாறுவார்கள். அதற்காக அவர்களை குறைத்து மதிப்பீடு சரியாக இருக்குமா?

தற்போது அமைச்சர் சொல்லியிருக்கும் வார்த்தையை கடந்த காலங்களிலும் சிலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒரு மாநிலத்தின் அமைச்சர் இப்படி குறிப்பிட்ட மொழி மக்கள் குறித்து பேசலாமா? இவர் வாதத்தின்படி பார்த்தால் இந்தி படிப்பவர்கள் எல்லாருமே பானி பூரிதான் விற்கிறார்களா? எல்லைகள் வகுக்காத காலத்தில் இருந்தே இடமாறி சென்று வியாபாரம் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. அப்போதுள்ளவர்கள் என்ன மொழியில் பேசியிருப்பார்கள் என்று யோசிக்க வேண்டும்.

ஏற்கனவே பல நாடுகளில் உள்ள தமிழ் மொழி, தமிழ் மாநிலத்தை தாண்டி பிற மாநிலத்தில் வளர வேண்டும் என்கிற எண்ணம் இங்குள்ள எத்தனைபேருக்கு இருக்கிறது சொல்லமுடியுமா? மொழியில் சிறந்த மொழி தமிழ் மொழி. அதை உயிராக காத்து வளர்த்தவர்கள் ஏராளம். அப்படியே நாமும் காக்கவும் வளர்க்கவும் செய்ய வேண்டும். அதேவேளை அடுத்த மொழியையும்,மொழியினரையும் அவமதிப்பு செய்ய கூடாது. இதை பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் முதலில் உணர வேண்டும்.

நடுநிலை.காம் ஏ.ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here