‘வாங்களேன், பேசுவோம்!’ 16ல் கட்சிகளுடன் பேச்சு

0
23

 நாளை மறுநாள்(ஜூன் 16), அனைத்து கட்சிக் கூட்டத்தை, மத்திய அரசு கூட்டுகிறது. அந்த கூட்டத்தில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்களுக்கு, எதிர்க்கட்சிகளின் ஆதரவை, மத்திய அரசு கோரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின், இரண்டாவது அரசின், முதல் கூட்டத் தொடரான, பட்ஜெட் கூட்டத் தொடர், 17ல் துவங்குகிறது. தொடர்ந்து, 40 நாட்கள் நடக்கும் இந்தத் தொடர், ஜூலை, 26ல் நிறைவடைகிறது. சில நாட்களுக்கு முன், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், பிரஹலாத் ஜோஷி மற்றும் அமைச்சர்கள், டில்லியில் வசிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியா மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, பார்லிமென்டை சுமுகமாக நடத்த, ஆதரவு தருமாறு கேட்டனர்.

அந்த வகையில், அனைத்து கட்சிக் கூட்டம், நாளை மறுநாள், பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கிறது. அதில், தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் மற்றும் பிற அலுவல்களுக்கு, எதிர்க்கட்சிகளிடம், மத்திய அரசு ஆதரவு கோரும். பார்லிமென்டின் இரு அவைகளான, 545 உறுப்பினர்களை உடைய லோக்சபாவில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 353 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், 245 உறுப்பினர்களை உடைய ராஜ்யசபாவில், 102 உறுப்பினர்கள் தான் உள்ளனர்.


இரு சபைகளிலும் மசோதாக்கள் நிறைவேறினால் தான், சட்டமாக மாறும் என்பதால், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை, மத்திய அரசு கோரி வருகிறது. குறிப்பாக, ‘முத்தலாக்’ மசோதா எனப்படும், முஸ்லிம்கள் பின்பற்றி வரும், மூன்று முறை, ‘தலாக்’ என்ற வார்த்தையை கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் முறைக்கு எதிரான மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது; ராஜ்யசபாவில் முடங்கியுள்ளது. அதை, சுமுகமாக நிறைவேற்றும் வகையிலும், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here