வைரஸை விரட்ட அரசின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் – நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

0
48
corona virus news

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்

தற்போது உலகம் முழுவதும் இருந்து வரும் அசாதாரண சூழ்நிலை எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

அடுத்து என்ன நடக்க போகிறது என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. கடந்த காலங்களில் விபரீதமான கிருமி தாக்குதலிலிருந்து உலகம் மீண்டிருப்பதை வரலாறு சொல்கிறது. தற்போது அப்படி ஒரு ஆபத்தான காலம் நகர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி மீள்வது என்பதை யோசிக்க வேண்டும்.

நம்மை வழிநடத்துகிற அரசுகள் பல்வேறு ஆய்வு செய்து நமக்கு சில யோசனைகள் சில நிபந்தனைகளை வழங்கி வருகிறார்கள் அவர்கள் வழங்கும் இந்த நிபந்தனைகள் எல்லோருக்கும் பொதுவானதாகும். இந்த நேரத்தில் குற்றம் கண்டுபிடிக்கும் அரசியல் பேச்சுக்கள் எங்குமே வேண்டாம்.

நாட்டில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி மற்றும் சமூக நல்லிணக்க அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் இணைந்து அரசு எந்திரத்தை கையாண்டு மக்களை பாதுகாக்க வேண்டும்.இதில் அரசியல் சார்ந்து குறை சொல்லும் போக்கு ஏற்பட்டால் அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருந்துவிடும்.

அரசு அறிவிப்புகள் அவ்வப்போது வந்தபோதும் நம்மில் பலர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. அதன் விளைவு தான் மக்களை முற்றிலுமாக ஒதுக்குவதற்கு அரசு அதிகாரிகள் கொஞ்சம் கூடுதல் யுக்திகளை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.போலீசார் அடிக்கலாமா என்கிற கேள்வி வரும்போது இத்தனை அறிவிப்புகள் அறிவித்த பிறகும் சும்மா சுற்றிப்பார்க்க வருவோர் ரோட்டிற்கு வரலாமா என்று கேள்வியும் வருகிறது.

இந்த இடத்தில் இன்னொரு கேள்வி.. அதாவது ரோட்டிற்கு வருவோரை உடனே வழிமறித்து தாக்கினால் வருவோர் அத்தியாவசிய தேவைக்காக வந்தவர் அல்லது அனாவசியமாக சுற்ற வந்தவர் என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.நியாயமான கேள்வியே.

இத்தனை நாள் பிரதமர் முதலமைச்சர் அமைச்சர் கலெக்டர் காவல்துறை மாநகராட்சி சார்பான அத்தனை அரசு அறிவிப்புகளும் மக்களிடையே கொண்டு சேர்த்த பிறகும் இதுபோன்ற அலட்சியப்போக்கு அதிகாரிகளை ஆத்திரம் அடைய செய்கிறது அந்தவகையில் பார்க்கும்போது அதிகாரிகள் செய்வது தவறில்லை என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.

அத்தியவசிய தேவைகளை தவிர மற்ற யாவரும் வெளியில் வராமல் இருந்தால் அந்த சுமூக நிலையில் அதிகாரிகள் யாரையும் அடித்து விரட்ட வேண்டிய அவசியமில்லை அப்படி ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்திக் கொடுப்பதனாலே இப்படி எல்லாம் அதிரடி அவசியமாகிறது. கொடூர கொரொனா வைரஸ் துரத்திக் கொண்டிருக்கும் போது பொறுப்பில் உள்ள அரசு நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துத்தான் ஆக வேண்டும்.

வைரஸுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கூட பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்கிற செய்தியை நாம் பார்க்கிறோம். எனவே வைரஸ்க்கு அதிகாரிகள், ஆட்சியாளர்,மக்கள்,வக்கீல், பத்திரிக்கையாளர் என்று எதுவுமே தெரியாது. எனவே அரசு சொல்லி இருக்கும் இந்த 21 நாள் கட்டுப்பாட்டில் நாம் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பிரச்சினை இல்லாமல் பாதுகாக்க முடியும்.

இந்த இக்கட்டான நேரத்தில் குற்றம்சாட்டி அரசியல் செய்வதை விட்டுவிட்டு அரசுக்கு தேவையான யோசனைகளை சொல்லுங்கள் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.மக்களை கட்டாய படுத்தலாமா என்கிற கேள்வி பலரிடம் இருக்கிறது ஆம் மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது தான். அத்தகைய சூழ்நிலையை மக்களும் அரசுக்கு கொடுக்கக்கூடாதுதானே.

அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. மென்மை போக்கை கடைபிடித்து பிரச்சினை பெரிதானால் அதுவும் பிரச்சினை தானே. இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள வேண்டியது போலீசார் பொதுமக்களை கண்டவுடன் அடிக்காமல் அவர்களிடம் விசாரணை செய்து அவர்கள் அனாவசியமாக சுற்றுபவர் என தெரிந்தால் அடிக்கட்டும் தவறில்லை.

கண்டவுடன் தாக்குவதாக இருந்தால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருவோர் அதில் பாதிக்கப்படுவார்கள். இந்த விஷயத்தை மட்டும் அரசு சற்று கவனத்தில் எடுக்கவேண்டும். காய்கறி கடைகளில் நிச்சயமாக வரிசை முறையை அமல் படுத்தி வைக்க வேண்டும். மற்றபடி சில நண்பர்கள் சொல்கிறார்கள் ரோட்டுக்கு வருவோரிடம் புரியும் படி எடுத்துச் சொல்ல வேண்டும் என்று.

அதற்கான காலம் கடந்துவிட்டது இத்தனை அசாதாரண சூழல் இருந்து வருவதை இன்னும் புரியாத மக்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு பாடம் நடத்த முடியாது அவர்களுக்கு நிச்சயம் போலீசாரின் இந்த ட்ரீட்மென்ட் தான் சரி. எது எப்படியோ மோசமான காலகட்டத்தில் நாம் பயணித்து வருகிறோம் நம்மை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் இருக்கிறது அப்படியானால் அவர்கள் சொல்லும் யோசனைகள் நிபந்தனைகள் அனைத்தையும் நாம் நிச்சயம் கேட்டே ஆகவேண்டும்.-நடுநிலை.காம் R.S.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here