அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் – நடுநிலை.காம்

0
42

இந்தியா என்பது இயற்கை வளம் மிகுந்த பூமியாகும்.

ஒரே நாட்டில் பல்வேறு வகையான நில அமைப்பு, பல்வேறு வகையான தட்பவெட்பநிலை, அதுபோல் சாதி,மதம்,மொழி என பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் கலாசாரமும், பண்பாடும் கொண்ட சிறந்த தேசமாகும்.

இந்தியாவின் வளத்தை அனுபவிக்க வந்த அந்நியர்கள், படிப்படியாக இங்கு ஆட்சியாளர் ஆனார்கள். அதற்கும் இங்குள்ள கலாசாரமும் பண்பாடும்தான் காரணம். தன்னிறைவு பெற்றிருந்த இந்தியருக்கு பிழைப்பிற்காக பிற நாடுகளை நோக்கி செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அதனால் அடுத்தவர் பொருளை அபகரிக்கும் எண்ணம் இல்லை. நாடோடிகளாக வரும் அந்நியர்கள் நம் பொருளை அபகரிப்பார்கள் என்றும் தெரியாமல் போனது. நம்மிடையே பிரிவினையை ஊட்டி பிரித்து நாடோடியாக வந்த அந்நியன் நம் ஆட்சியாளர் ஆகும் அவலமும் நடந்துவிட்டது.

அந்த வகையில் வியாபாரத்திற்காக வந்த வெள்ளைக்காரர்கள் நம்மை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமைபடுத்தி வைத்துவிட்டனர். நம்மை சூழ்ச்சியால் பிரித்து மோதவிட்டு நம் செல்வங்களை கொள்ளையடித்து சென்றனர். அவர்கள் வசதிக்காக நம் நாட்டில் சில கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். அதை நாம் பயன்படுத்தி கொண்டோம். என்றாலும் அது நமக்காக அமைக்கப்பட்டது அல்ல என்பது மட்டும் உண்மை.

அவர்கள் வசதிக்காக பெரிய பெரிய குடோன் களை கட்டி அதில் இந்தியாவில் விளையும் தானியங்களை சேகரித்து வைத்தார்கள். கப்பல் மூலம் அவற்றை அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். அதற்கு வசதியாக சாலை வசதி, ரயில் வசதி என பல்வேறு வசதிகளை செய்தனர். இதற்கெல்லாம வசதியாக மொழி, மதம் ஆகியவற்றை பரப்பினர். இது அவர்களுக்கு பேருதவியாக இருந்தது. இந்தியாவின் உயர்ந்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் அழித்தால்தான் அவர்களின் நடைமுறைக்கு மக்களை மாற்றமுடியும் என்று கருதினர்.

அதனால் அதற்காக பல சூழ்ச்சிகளை செய்தனர். அதாவது தன் கையை வைத்தே தன் கண்ணை குத்துவது என்பதுபோல், சொந்த நாட்டு மக்களே தன் நாட்டின் கலசாரம் பண்பாட்டை வெறுக்கும்படியான மனநிலையை வளர்த்தனர். அதற்காக வெள்ளைக்காரர்கள்தான் உயர்ந்தவர்கள் என்பது போல் தோற்றத்தை உருவாக்கினர். அவர்களை சீமத்துரை அதாவது அவர்கள் பெயருக்கு பின்னாடி துரை என்பதை சேர்த்தனர். அதேபோல் பெயருக்கு முன்னால் லார்ட் அதாவது கடவுள் என்று அழைப்பது போன்று உருவாக்கினர். அதேபோல் இந்தியாவில் இருந்த நம்பிக்கையில் இருந்த குறைபாடுகளை பெரிதாக காட்டி மூட நம்பிக்கை மலிந்த தேசமாக சித்தரித்தனர்.

ஒரு பகுதியில் இருந்த மூடநம்பிக்கை, ஏற்ற தாழ்வு நடவடிக்கைகள் நாடு முழுவதும் இருப்பது போல் காட்டினர். அந்த நம்பிக்கை உள்ளே சில அர்த்தம் இருப்பதையும் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கு பதிலாக அதையே பெரிய பிரச்னையாக காட்டினர். அதற்கு தீர்வு தந்ததால் வெள்ளையர்களை மக்கள் மதிக்கும் நிலையும் வந்தது. பிற்காலத்தில்தான் அவர்களின் உண்மை நோக்கம் மக்களுக்கு தெரிய வந்தது. இந்திய மக்களை பட்டினியாக போட்டுவிட்டு அவர்கள் தேசத்துக்கு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

பட்டினியால் செத்து மடிவதை பார்த்த பிறகுதான் வெள்ளையரின் தேவைகளுக்காக இந்தியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்கிற உண்மை இந்தியர் அனைவருக்கும் தெரியவந்தது. ஆங்காங்கே எதிர்ப்பு குரல் வெளிவந்தன. அதனை அடக்கும் நோக்கில் கடுமையான சட்டங்களை போட்டு தண்டித்தது வெள்ளையரசு. இதை பார்த்த மக்கள் முழுமையாக வெள்ளையரை விரட்டியே ஆக வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தனர். அதன்படி நாடு முழுவதும் நாட்டைத்தாண்டியும் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.

எங்கள் நாட்டை எங்களிடம் கொடுத்துவிடு என்று தனக்கு தானே வருத்திக் கொள்ளும் அறவழியிலும், எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று ஆயுத வழியிலும் வெள்ளையருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தனர். அதன் பயனாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இந்தியா வெள்ளையர்களிடமிருந்து முழுமையாக விடுதலை பெற்றது. இப்போது நாமெல்லாம் சுதந்திர நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இப்படி சுதந்திரமாக வாழ நம் முன்னோர் கடுமையாக வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்களின் தியாகத்தால்தான் நாம் இப்போது இவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறோம்.

இன்றை நாளில் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறவேண்டும். இந்த நாளை நாம் கொண்டாட வேண்டும். அதுவே நாம் தியாகிகளுக்கு செய்யும் நன்றி கடனாகும்.!

  • ஏ.ஆர்.எஸ்.சரவணப்பெருமாள் – நடுநிலை.காம்
    (8056585872)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here