தேசபக்தர்களை சுட உத்தரவிட்ட ஆஷ்துரை..! ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்..!!

0
41

சுதந்திர பாரதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, பாரதம் அடிமைப்படு கிடந்ததையும், அந்த சுதந்திரத்திற்காக நடந்த பெரும் போரையும், அப்போரில் பங்கு கொண்டு தியாகம் பல புரிந்த வீரத்தியாகிகளின் வரலாற்றையும் கேட்கும் பொழுது வியப்பாக இருக்கிறதல்லவா? அத்தகைய வியத்தகு செயல்களில் ஒன்றை, கீழே காண்போம்.

அந்த நாளில், கேரளத்தை சார்ந்திருந்த, செங்கோட்டையில் உள்ள கோயில் ஒன்றில், ரகுபதிஐயர் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சங்கரன் என்ற ஒரு புதழ்வன் இருந்தான்.ஏழையானாலும், ஒரே புதல்வன் என்பதால், மிகவும் வாஞ்சையோடு, அவனை வளர்த்து வந்தனர், அவனது பெற்றோர்கள். அதனால்தானோ என்னவோ, சங்கரன் என்ற அவன் பெயர் மறைந்து வாஞ்சி, வாஞ்சி, வாஞ்சிநாதன் என்றாகிவிட்டது போல. சிவனுக்கு இன்னொரு பெயர் வாஞ்சி நாதன் என்பதால் அந்த பெயராக கூட இருக்கலாம்.

அந்த கால முறைப்படி, வாஞ்சிக்குச் சிறு வயதிலேயே, திருமணம் செய்து வைத்தனர். வாஞ்சிநாதனுக்கு விவாகம் ஆகும் போது வயது 17; அவர் மனைவியான சிறுமிக்கு வயது 6. படிப்பு அதிகம் இல்லாத வாஞ்சிநாதன் வன இலாகாவில் ஒரு கார்டு வேலையில் சேர்ந்தார். சில வருடங்கள் சென்றபின்,1909 வரை, தன் பெற்றோர்களுடனே அவருடைய மனைவி, வாஞ்சிநாதனோடு வந்து சேர்ந்தாள். ரகுபதி ஐயரின் வறுமை காரணமாக, தன் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய வாஞ்சிநாதன், தனது தகப்பனாரின் செலவுகளுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. இதனால், அவர் தந்தைக்கு, இவர் மீது பெருங்கோபம்.

இந்நிலையில், வாஞ்சிநாதன், தன் மேலதிகாரிகளுடன் சண்டையிட்டுத் தன் வேலையை ராஜினாமா செய்ய நேரிட்டது. எனவே, கேரளத்தைவிட்டு, நெல்லைக்கு வந்து சேர்ந்தார். மனைவியை பெற்றோரிடம் விட்டுவிட்டு, வீரராகவபுரத்தில் இருந்த தன் நண்பர்கள் உதவியுடன் வேலைதேட முயன்றார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. அங்கிருந்து தூத்துக்குடிக்கு சென்று பார்த்தார் அங்கேயும் வேலை கிடைக்கவில்லை.

நாட்டில் நடைபெற்றுவரும் அசாதாரண சூழ்நிலைதான் தனக்கு வேலைக்காமல் போவதற்கு காரணம் என்று நினைக்க ஆரம்பித்தார். அப்போது வ.உ.சிதம்பரத்தை ஆங்கில நிர்வாகம் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. வ.உ.சியின் முயற்சிகள் அனைத்தையும் முடக்கி பார்த்து முடியாமல் அவர் மீதும் அவரது நண்பர் சுப்பிரமணிய சிவாமீதும் வழக்குபோட்டு சிறைக்கு அனுப்பியது. நெல்லையில் நடைபெற்ற கலவரத்திற்கு முழு பொறுப்பையும் இவர்கள் மீது சாட்டி உள்ளே தள்ளியது ஆங்கிலேய அரசு. வ.உ.சிக்கு 40 ஆண்டுகள் சிறைதண்டனை, தூத்துக்குடி சப்-கலெக்டர் ஆஷ்துரை, தேசபக்தர்களை சுட உத்தரவிட்டிருந்தது என அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த காலம் அது. இதையெல்லாம் அறிந்த வாஞ்சிநாதனுக்கு ரத்தம் கொதித்தது. வெள்ளையர்களை தொலைத்து, பாரதத்திற்கு சுதந்திரம் பெற்றால் மட்டுமே நாட்டிற்கு சுபிட்சம் பிறக்கும் என்ற முடிவுக்கு வந்தார் வாஞ்சிநாதன்.

சில ரகசிய சங்கங்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சியில் இறங்கினார். சுதந்திர வீரர்களை சுடச்சொன்ன ஆஷ்துரை, சுடப்பட்டே சாகவேண்டும் என்று தீர்மானித்தனர். பாண்டிச்சேரியில் இருந்த வ.வே.சு.ஐயர் முயற்சியால் வெளிநாட்டில் இருந்து துப்பாக்கிகள் வரவழைக்கப்பட்டு தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. வ.வே.சு.ஐயரே அனைவருக்கும் ரகசியமாக பயிற்சியும் கொடுத்தார். அவரிடம் பயிற்சி பெற்றவர்களில், ஆஷ்துரையைக் கொல்வதற்கு முன்னணியில் நின்றவர்களில், நீலண்ட பிரமசாரி, வாஞ்சிநாதன், ஏட்டு குருதான் ஆவர். ஆனால் சீட்டு குலுக்கி போட்டத்தில், வாஞ்சிநாதன் பெயரே வந்தது.

தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த வாஞ்சிநாதனுக்கு நெல்லைக் கலெக்டராக இருந்த விஞ்சுதுரை மாற்றலாகி, அப்பதவிக்கு ஆஷ்துரை நியமிக்கப்பட்டதும், 1911-ஜூன் மாதம் அவன் கோடைவெயில் காரணமாக கொடைக்கானல் போகப்போகிறான் என்ற செய்தியும், தேனாய் இனித்தன. காலம் கனிந்துவிட்டது.ஆஷ்துரையும், அவனது மனைவியும் 17ம் தேதி காலை 9 மணிக்கு, நெல்லையில் ரயில் ஏறினர். வண்டி மணியாச்சியை 10 மணிக்கு அடைந்தது. அங்கிருந்து தூத்துக்குடி போட் மெயிலில் மாறிச் செல்ல வேண்டும். அன்று பார்த்து, மெயில் சரியான நேரத்திற்கு வரவில்லை. எனவே, வந்த வண்டியின் முதல் வகுப்பு அறையிலேயே ஆஷ்துரையும் துரைசானியும் அமர்ந்திருந்தனர்.

மெயிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஷ், தற்செயலாக ஜன்னல் பக்கம் திரும்பினான். தன்னை நோக்கி ஒரு கைத்துப்பாக்கி குறிபார்க்கப்படுவதைக் கண்டதும், பதறி எழுந்தான். ஆனால், அதற்குள் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு, அவன் வயிற்றின் வலப்புறம் பாய்ந்து, நுரையீரலை ஊடுருவிச் சென்றுவிட்டது. ஆஷ் கீழே சாய்ந்துவிட்டான்; கும்பல் கூடிவிட்டது. சுட்ட வாஞ்சிநாதனோ கூட்டத்தினரிடமும், போலீஸ்காரர்கள்இடமும் பிடிபடாமல் ஓடிச்சென்று, ஒரு கக்கூசுக்குள் புகுந்து கொண்டார். விரட்டி வந்தவர்கள் கக்கூசை நெருங்குவதற்குள், மற்றொரு குண்டு சுடப்பட்டுவிட்டது. ஆம், வாஞ்சிநாதன் தம் கையிலிருந்த துப்பாக்கியைத் தம் வாய்க்குள் வைத்துத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அவர் அணிந்திருந்த கோட்டில் இருந்த சீட் மூலமாகத்தான் அவர் யார் என்பது குறித்து தெரிந்தது. அவர் வைத்திருந்த துப்பாக்கி பெல்ஜியத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த பிரெளனிங் துப்பாக்கியாகும்.

அவர் வைத்திருந்த சீட்டில்,‘’வெள்ளையனை விரட்டி, சநாதன தர்மத்தை நிலைநாட்டுவதே, சுயராஜ்யமாகும்.ஸ்ரீராமன்,ஸ்ரீகிருஷ்ணர்,சிவாஜி,குருகோவிந்தசிங்,அர்ஜூன்சிங் முதலியோர் நாட்டை ஆண்ட பொழுது சகல மதங்களும் உரிமையும்,சலுகையும்,பாதுகாப்பும் பெற்று விளங்கின.பசுவின் இறைச்சியைத் தின்னும் மிலேச்ச ஆங்கிலேயர்கள், இந்திய நாட்டிற்கு, ஐந்தாம் ஜார்ஜை அரசராக்கி, முடிசூட்ட நினைக்கின்றனர். மூவாயிரம் தமிழர்கள், அவர் அடியெடுத்து வைத்ததும், அவரைக் கொல்ல சித்தமாக உள்ளனர். அதை வெளிக்காட்டவே நான் ஆஷ்துரையைக் கொன்றேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

எளிய பிராமண குடியில் பிறந்து வளர்ந்த வாஞ்நாதனின் இத்துணிகரமான தற்கொலை முயற்சி, தியாகம், பாரதத்தையே மெய்சிலிர்க்க வைத்துவிட்டன. இந்நிகழ்ச்சி தொடர்பாக, பலர் சந்தேகத்திற்குள்ளாகிக் கைது செய்யப்பெற்றனர். எனினும் அவர்கள் நினைத்த காரியத்தை முடித்துவிட்ட்டோம் என்ற நிறைவிலே மகிழ்ந்தனர். சிறையைக் கண்டு அஞ்சவில்லை.

தன்னுடைய 30வது வயதில் தேசத்திற்காக, துணிகரமான ஒரு சாகசச் செயலை செய்து முடித்து, அச்செயலிலேயே தன்னையும் பலியிட்டுக் கொண்ட வாஞ்சிநாதனை நாடு என்றும் மறந்துவிடாது. சுதந்திரப் போரின் சரித்திரம் உள்ளவரை, வாஞ்சியின் பெயரும், தீரமும், தியாகமும் நம்மைத் தலைவணங்கச் செய்து கொண்டே இருக்கும்.

வாஞ்சிநாதன் வரலாற்றை நினைவு கூறும் வகையில் மணியாச்சியில் நினைவிடம் அமைக்க வேண்டும். வாஞ்சி மணியாச்சி என்று பெயர் வைப்பதற்கே குமரிஅனந்தன் கடும் போராட்டம் நடத்த வேண்டியது இருந்தது. தற்போது வாஞ்சிநாதன் பெயர் அதிகம் பேசப்படுகிறது. எனவே தற்போதுள்ள மத்தியரசு, வாஞ்சி மணியாச்சியில் வாஞ்சிநாதன் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.

வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஷ்துரைக்கு தூத்துக்குடியில் நினைவு மண்டபம் இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது. நல்லவனை கெட்டவனாகவும் கெட்டவனை நல்லவனாகவும் ஆக்கும் வரலாற்று திரிபுகள் வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது நிறைய நடந்தது. அதில் இதுவும் ஒன்று. வாஞ்சிநாதனுக்கு நினைவு மண்டபம் அமைத்து அதையே நினைவுச் சின்னமாக வைத்திருப்பதுதான் சரியான முறையாகும்.

மேலும் சமூக ஊடகங்கள் மூலம் வாஞ்சிநாதனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் சாதி துவேசத்தோடு ஆஷ்துரையை கொன்றார் என்பது போன்று தவறான கதையை சொல்லி பதிவு செய்திருக்கிறார்கள். அந்த சமூக விரோதிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here