தூத்துக்குடி மாநகராட்சியில் தயாராகும் இயற்கை உயிரி உரம் இலவசமாக கிடைக்கிறது – மேயர் ஜெகன்பெரியசாமி தகவல்

0
32

தூத்துக்குடி, ஆக.18:

தூத்துக்குடி மாநகராட்சியில் தயாரிக்கப்படும் இயற்கை உயிரி உரத்தினை பொதுமக்கள் இலவசமாக வாங்கி சென்று பயன்பெறலாம் என்று மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 60வார்டுகள் இருக்கின்றன. இதில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், கடைகள், மார்க்கெட், மற்றும் மாநகர் பகுதிகளில் தினம்தோறும் டன் கணக்கில் குப்பை சேர்கிறது. அவற்றை தருவைக்குளம் பகுதியிலுள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு பக்குவபடுத்துகிறார்கள்.

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை முறையில் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இயற்கையிலான இந்த மண்புழு உரம் விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனை கிள்ளிகுளம் வேளாண்மைக்கல்லூரியின் மண்ணியியல் துறை பேராசிரியர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தின் தரத்தையும் அப்பேராசிரியர்கள் குழு உயர்த்தியுள்ளது.

இந்த இயற்கை உயிரி உரத்தினை விவசாயத்திற்கு மட்டுமின்றி அனைத்து வகையான மரம், செடி, கொடிகளுக்கும் பயன்படுத்தலாம் என்று அக்குழு உறுதி செய்துள்ளது.

இந்தநிலையில் உயிரி உரத்தின் விற்பனையை மேம்படுத்திடும் பொருட்டு அதற்கான இலட்சினை (லோகோ) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முத்து நகரின் இயற்கை உரம் ”முத்துரம்” என்று வடிவமைக்கப்பட்டுள்ள அடையாள சின்னத்தின் (லோகோ) வெளியீட்டு விழா தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு, மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் தேரடிமணி முன்னிலை வகித்தார். விழாவில், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி இயற்கை உயிரி உரத்திற்கான அடையாள சின்னத்தை வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாதம்தோறும் சுமார் 50டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உயிரி உரத்தினை தேவைப்படும் விவசாயிகள் தாமாகவே வந்து வாங்கி சென்று வருகின்றனர். இதுபோன்று பொதுமக்களும் வாங்கி சென்று வருகின்றனர்.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினர் இந்த இயற்கை உரத்தினை ஆய்வு செய்து அதன் தரத்தினை உயர்த்தியுள்ளனர். தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்த உரம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு லட்சம் மரம், செடிகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மரக்கன்றுகள் வழங்கும்போது மக்களுக்கு இந்த இயற்கை உரம் இலவசமாக வழங்கப்படும்.

அதுபோக தற்போது நிறையபேர் வீடுகளில் தோட்டம் வைத்துள்ளதுடன், மாடிகளில் காய்கறி தோட்டமும் அமைத்து பராமரித்து வருகின்றனர். அவர்களும் தங்களுக்கு தேவையான இயற்கை உரத்தினை இலவசாக பெற்றுக்கொள்ளலாம்.

அதோடு, நாள்தோறும் மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க செல்லும் நேரத்தில் தங்கள் கையோடு ஒரளவிற்கு இயற்கை உரமும் கொண்டு செல்கின்றனர். இதனை தேவைப்படும் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். வரும் மாதங்களில் 50டன் இயற்கை உயிரி உரத்திற்கு பதிலாக 100டன் இயற்கை உயிரி உரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இதில், கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மண்ணியியல் துறைத்தலைவர் சுரேஷ், மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மண்ணியியில் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைப்பேராசிரியரும், திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளருமான பாக்கியத்து சாலிகா ரபிக் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here