எந்த வழியிலாவது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்கிற கட்டாய நிலையில் மத்திய மாநில அரசுகள் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நமது பாரம்பரிய மருத்து முறைகளான ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தமருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவக் கவுன்சில் இயக்குனர் டாக்டர் கனகவல்லி, சித்த மருத்துவ மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுத் தலைவருமான டாக்டர் ஜெயபிரகாஷ்நாராயணன், மாநில மருந்து உரிமை வழங்கும் அதிகாரி டாக்டர் பிச்சையாகுமார், சித்த மருத்துவ பயிற்சியாளர் டாக்டர் சிவராமன் உள்பட 12 மூத்த ஆயுஷ் துறை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமரிடம், ‘’கொரோனா பாதித்த, அறிகுறி உள்ள, அறிகுறி இல்லாத நபர்களுக்கு ‘சுபசுரக் குடிநீர்’ வழங்க அரசு முன்வரவேண்டும். இதை மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்க வேஎண்டும். நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவத்தையும் இணைத்து கொரோனாவுக்கு கூட்டு சிகிச்சை அளிப்பதற்கும், இது குறித்து மருந்தியல் ஆய்வுக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
சமீப காலத்தில் டெங்கு கட்டுப்படுத்த நவீன மருத்துவத்துடன் கூட்டாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முறை சிறப்பாகக் கையாளப்பட்டது. அதில் நல்ல பலனும் கிடைத்தது. அதே வகையில் கொரோனாவுக்கும் கூட்டு மருந்து சிகிச்சை வழங்கலாம்’’ என்றார் டாக்டர் ஜெயபிரகாஷ்நாராயணன்.
ஆயுர்வேதா, யுனானி,யோகா மருத்துவத்தை கொரோனாவுக்கு பயன்படுத்து குறித்தும் நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிப்பதில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன் குறித்தும் இக்கட்டான இந்த நேரத்தில் தேசத்துடன் இணைந்து சேவையாற்ற விரும்புவதாகவும் அதற்கு உடனே தயாராக இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னதை கேட்டறிந்த பிரதமர் மோடி, ’’தேசத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஆயுஷ் துறைக்கு நீண்டகாலப் பாரம்பரியம் உண்டு. இப்போது கொரோனா பிரச்னையைக் கையாள்வதில், ஆயுஷ்துறையின் முக்கியத்துவம் பல மடங்கி அதிகரித்துள்ளது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயுஷ் மருத்துவர்கள் பரவலாக இருக்கின்றனர். இவரகளையும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
கொரோனாவிக்கு பாரம்பரிய மருத்துவத்தில் தீர்வு இருப்பதாக ஆய்ஷ் மருத்துவர்கள் கூறும் தகவல்களை, உறுதிப்படுத்துவது மற்றும் ஆய்வு செய்வது முக்கியம். ஆயுஷ் விஞ்ஞானிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்(ஐசிஎம்ஆர்) அரிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ் ஐ ஆர்) மற்றும் இதர ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, இதற்கான ஆதாரபூர்வ ஆய்வு முறைகளை உருவாக்க வேண்டும்.
இப்போது ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்வதில், சுகாதாரா துறையின் அனைத்து பிரிவினையும் நாடு பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறது.
தேவை ஏற்பட்டால், ஆயுஷ் மருத்துவத்தில் தொடர்புடைய தனியார் மருத்துவர்களையும் அரசு சேவையில் ஈடுபடுத்தி கொள்ளலாம். இப்போது அதிக தேவையாக உள்ள கிருமிநாசினிகளை தயாரிக்க, ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்கள், தங்களிடம் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்நாட்டில் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து உலகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களை சென்றடையவும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொலைவழி மருத்துவ களத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக, அனைவரும் சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்’’ என்று பேசினார் பிரதமர்.
இதன் மூலம் நமது பாரம்பரிய மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கப்போகிறது என நம்புகிறோம். வெறும் கிருமிநாசினியை உற்பத்தி செய்வதற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிடாமல் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சரி!
nadunilai.com R.S.SARAVANAPERUMAL