ஆசிரியர் பணிக்காக மீண்டும் ஆன் லைன் மூலம் சான்றிதல் சரிபார்க்கும் பணி – சர்வர் பிரச்னையால் வாய்ப்பை இழந்தவர்கள் கோரிக்கை

0
22

அத்தனை காரியத்திற்கும் ஆன் லைன் அவசியம் என்றாகிவிட்ட நிலையில், அவசியமான காரியம் அத்தனையும் அதன் மூலம் சாதிக்க முடிகிறதா என்பது கேள்வி குறிதான். அப்படித்தான் ஆசிரியர் பணிக்கான ஆன் லைன் தேர்வில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆசிரியர் பதவியில், 3,236 பேரை நியமிக்க, முதல் முறையாக, 7,000த்துக்கும் மேற்பட்டோருக்கு, நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு பெற்றுள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளில் உள்ள, 2,207 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், இந்த ஆண்டு பிப்ரவரியில், கணினி வழி தேர்வு நடந்தது.

இதில், 2.5 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.தேர்வு முடிவு ஜூலையில் வெளியானது. பின், இந்த தேர்வின் வழியே நியமிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, 3,236 ஆக உயர்த்தப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தரவரிசை பட்டியல் வெளியானது.பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, முதல் கட்டமாக ஆன்லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

இதையடுத்து, தேர்வர்களின் அசல் சான்றிதழ்களை நேரடியாக சரிபார்க்கும் பணி, இம்மாதம், 2ம் தேதி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் துவங்கியது.இந்த பணிகளை மேற்கொள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, அவசர ஆம்புலன்ஸ் வசதி, சிறப்பு மருத்துவர் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு, தேர்வர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

டி.ஆர்.பி., தலைவர் லதா மேற்பார்வையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி துறையை சார்ந்த, 400 பேர் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.டி.ஆர்.பி., வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, மூன்று நாட்களில் 7,000 பேருக்கு, நேரடியாக அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு பெற்றது.ஆசிரியராக நியமனம் செய்யப்படுவோருக்கு, இதுவரை மாவட்ட கல்வி அலுவலகங்களே சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொண்டன. ஆனால், முதல் முறையாக டி.ஆர்.பி., சார்பில் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.அதேபோல, ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., சார்பில் கணினி வழி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு நியமனம் செய்யப்படுவதும் இதுவே முதல் முறை.

என்றாலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக காத்திருந்த விண்ணப்பதாரர் பலருக்கு அதில் இடம்பெற முடியாமல் போனது. சான்றிதழ் சரிபார்ப்பிற்காக சான்றிதழை சமர்பிக்கும்படி பட்டியலில் உள்ளவர்களுக்கு கடந்த மாதம் 26ம் தேதி மெயில் மூலம் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் மாத இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாம். மெயிலை பார்த்தவர்கள் ஆன்லைன் மூலம் சமர்பித்திருக்கிறார்கள். அதில் பலருக்கு முடியாமல் போனதாம். தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட சர்வரில் விண்ணப்பிக்க முடியவில்லையாம்.

அப்படி சான்றிதழை சமர்பிக்க முடியாமல் போனவர்கள் ஏராளம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். எனவே சான்றிதழை சமர்பிக்க மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here