வெளிநாட்டிற்கு செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க, உயர் கல்விகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்

0
14

இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. மேலும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்பது சந்தோஷமான விசயம்தான். ஆனால், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேற்படிப்பிற்கு மாணவர்கள் அதிக அளவில் அந்நிய தேசத்திற்கு செல்கிறார்கள் என்பது நெருடலான விசயமாகத்தான் பார்க்க முடிகிறது. மருத்துவமும், பொறியியலும் உலக அளவில் பொதுவானதாக ஆகிவிட்டது. ஆனாலும் நாட்டிற்கு நாடு சிதோஷ நிலைக்கேற்ப சிகிச்சை முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அந்தந்த நாடுகளில் உயர் படிப்பை படிப்பதுதானே நல்லது.

அதிலும், உக்ரைன், சீனா போன்ற வெளிநாடுகளில் மருத்துவம் படித்து திரும்பும் இந்திய மாணவர்களுக்கு தொடக்கத்தில் அந்த நாடுகளில் நீட் தேர்வு இருப்பதுபோல் திரும்பி வந்த பிறகு இந்தியா நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும். எந்த உயர் படிப்பிற்கும் நாடு விட்டு நாடு செல்வதில் தவறில்லை என்றாலும், அதே நிலையில்தான் ஆண்டாண்டுகாலமாக இருக்க வேண்டுமா என்பதுதான் இப்போதைய கேள்வி?.

உக்ரைனில் போர் நடந்து வருவதால் அங்கு படிக்க போன மாணவர்களை திரும்ப இந்தியாவிற்கு அழைத்து வந்துவிட்டோம். அவர்களுக்கு உரிய கல்வியை கொடுப்பது நமது அரசின் கடமை. அதுபோல் இங்குள்ள மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்வி படிக்க வேண்டும். அதற்காக இந்தியாவிலேயே வெளிநாட்டிற்கு இணையாகவோ அதற்கு மேலாகவோ கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும்தானே?.

கொரோனா பிரச்னைக்கு பிறகு இந்தியாவில் இருந்து மாணவர்கள் வந்து படிக்கலாம் என்று தற்போது சீன அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு மாணவர்கள் தயாராகும் நிலையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், சீனாவில் உள்ள நிலவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு, அங்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவது குறித்து மாணவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த 2015 – 2021 கால கட்டத்தில், சீனாவில் மருத்துவம் படித்து முடித்தம் 40 ஆயிரத்து 417 மாணவர்கள், இந்தியாவில் நடத்தப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் வெளிநாட்டு மருத்து மாணவருக்கான தகுதித் தேர்வில் பங்கேற்றனர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோரே, இந்தியாவில் மருத்துவப் பணியில் ஈடுபட முடியும். இதன்படி இந்தத் தேர்வை எழுதியோரில், 6,387 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 16 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சீன அரசு அங்கிகரித்துள்ள, 45 பல்கலைகளில் மட்டுமே, ஆங்கில வழியில் கற்பிக்கப்படும். மற்ற பல்கலைகளில், சீன மொழியில் படிக்க வேண்டும். ஆங்கில வழி பல்கலைகளிலும், அடிப்படை சீன மொழியை கற்க வேண்டும். அங்கு ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு மற்றும் ஒரு ஆண்டு பயிற்சியை முடிக்க வேண்டும்.

அவ்வாறு அங்கு மருத்துவம் முடித்தோர், இந்தியாவில் நீட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகே, வெளிநாட்டு மருத்துவ மாணவருக்கான தகுதித் தேர்வில் பங்கேற்க முடியும். இதேபோல், சீனாவில் உள்ள பல்கலைகளில், கல்விக் கட்டணம் ஒன்றுக் கொன்று வேறுபடும். அதனால் குறிப்பிட்ட பல்கலையின் கல்வி கட்டண விபரங்களை முன்னதாகவே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்னதாக மாணவர்களின் அனுபவங்களின்படி, சீன பல்கலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஆங்கில திறன் குறித்து திருப்தி தெரிவிக்கவில்லை. அதுபோல, மருத்துவ பரிசோதனை வகுப்புகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தரப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தங்களுடைய நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை குறித்து எந்தப் பட்டியலையும் சீனா வெளியிடுவதில்லை.

தற்போதைய நிலையில், சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாக அமல்படுத்தபட்டுள்ளன. இதையும் தெரிந்து கொண்டு, மாணவர்கள் உரிய முடிவுகளை எடுக்கலாம் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இப்படி சீனாவின் நிலை குறித்து நமது மாணவர்களை எச்சரிக்கும்போதுதான் அத்தகைய கோரிக்கை எழுகிறது. உலகலாவிய மருத்துவம், பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புகளை இந்தியாவிலேயே கற்கும் வசதியை மேம்படுத்தினால் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளை தேடி செல்ல வேண்டிய அவசியம் வராது.

எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து அனைத்து இந்திய மாணவர்களுக்கும் உயர்கல்வி படிப்பதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் சார்பில் கோரிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here