திருநெல்வேலி – தூத்துக்குடி செல்லும் பேருந்துகள், புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில் சிக்கல் வரப்போகிறது.!

0
29

தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது புதுக்கோட்டை. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இங்குதான் இருக்கிறது. சுமார் 25 ஊராட்சிகளுக்கு புதுக்கோட்டைதான் தலைமையிடம். தூத்துக்குடி மாநகர் நெருக்கடி மிகுந்து காணப்படுவதால், புறநகர் பகுதியாகவும் இயற்கை காற்று மற்றும் போக்குவரத்து வசதி உள்ள ஊரான புதுக்கோட்டை மற்றும் கூட்டாம்புளி பகுதியில் குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மிக வேகமாக வளர்ந்துவரும் புதுக்கோட்டைக்கு கூட்டாம்புளி, குலையன்கரிசல், சேவைகாரன்மடம், கூட்டுடன்காடு, சிலுக்கன்பட்டி, வாகைகுளம், முடிவைத்தானேந்தல் மற்றும் பேரூரணி பகுதியை சேர்ந்த மக்கள் அன்றாட தேவைக்காக வந்து செல்கின்றனர். ஆயிரகணக்கான மக்கள் வசிக்கும் புதுக்கோட்டை பகுதி இப்போது பிசியாக இருக்கும் நகராக உருவெடுத்திருக்கிறது.

தூத்துக்குடியில் இருந்து நெல்லை, ஸ்ரீவைகுண்டம்,சாயர்புரம் உள்ளிட்ட பகுதி நோக்கி செல்லும் பேருந்துகள் புதுக்கோட்டை வழியாகத்தான் சென்றாக வேண்டும் என்கிற நிலை இருந்தது. திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் நடந்தபோது புதுக்கோட்டையை தாண்டி அச்சாலை சென்றது.

அதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பஸ்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லும் என்கிற நிலை மாறியது. வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் பாயிண்ட் – பாயிண்ட் அல்லாத பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அளவிலான உத்தரவின் பேரில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த பாலம் கட்டி முடிக்கபட்டு திறந்துவிடப்பட்டதும், தற்போதைய நிலையில் நிச்சயம் மாற்றம் வரும். திருநெல்வேலியில் இருந்து வரும் பஸ், புதுக்கோட்டை ஊருக்குள் வந்து திரும்பும் போது மீண்டும் அந்த பாலம் அருகில் சென்றுதான் வெளியே போக முடியும். அப்படி ரிஸ்க் இருப்பதால் பல பஸ்கள் வராமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது ஊருக்குள் வந்து போஸ்ட் ஆபீஸ் அருகில் வெளியே போகும் சாலை அடைபட்டு சர்வீஸ் ரோடாக மாறும் நிலை இருப்பதாகவே தெரிகிறது. அதாவது, நெல்லை மற்றும் வாகைக்குளம் வழியாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் புதுக்கோட்டையை சுற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படியானால் தற்போது போஸ்ட் ஆபீஸ் அருகில் இறக்கிவிட்டுவிட்டு போவதுபோல் பாலத்தின் அருகிலேயே இறக்கிவிட்டுவிட்டு போகும் நிலை ஏற்படும்.

எனவே கடந்த காலங்களில் இயக்கத்தில் இருந்த பழைய பாலத்தை புதுப்பிக்க வேண்டும். அதை புதுப்பிக்க முடியாது அதற்கான காலம் முடிந்துவிட்டது என்றால், அதன் அருகில் புதிதாக பாலம் கட்ட வேண்டும். பஸ்கள், தட்டப்பாறை விலக்கு பகுதியில் இருந்து பிரிந்து வந்து நாம் கூறும் பழைய பாலம் அருகில் புதிய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சாயர்புரம், நெல்லை மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஊர்களுக்கு செல்லும்படி செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்தந்த ஊர்களில் இருந்து வரும் பஸ்கள் அதே பழைய பாலத்திற்கு அருகில் உள்ள புதிய பாலம் வழியாக தட்டப்பாறை விலக்கிற்கு சென்று தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றுவிடும்.

இடையில் எந்த தடையும் இருக்க போவதில்லை. ஓட்டுனநர்களுக்கும் இடையூறு இல்லை. வியாபாரிகளுக்கும் தொழில் பிரச்னை இல்லை. பொதுமக்களுக்கும் அலைச்சல் இல்லை. தற்போது கட்டி வரும் புதிய மேம்பாலம் வேலைகள் முடிவதற்குள் இந்த திட்டத்தை அரசு கவனத்தில் எடுத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது முடக்கி வைக்கபட்டிருக்கும் பழைய பாலம் வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினால் அதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகுகிறது. அதனடிப்படையில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் விரும்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here