சித்த மருத்துவம் என்றாலே போலியான மருத்துவம் என்ற தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் – அன்புமணிராமதாஸ் அதிரடி

0
33
anbumani ramadas

சித்த மருத்துவம் என்றாலே போலியான மருத்துவம் என்ற தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மருத்துவருமான அன்புமணிராமதாஸ் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

’’சீனாவில் உருவாக்கிய கொரோனா வைரஸ் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் வேகமாக பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் நோயை தடுப்பதற்கான தடுப்பூசியோ, குணப்படுத்துவதற்கான மருந்தோ இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் நோயை தடுக்கவும், குணப்படுத்தவும் தேவையான மருந்துகளை கண்டுபிடிக்க அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இன்னும் சில நாடுகளில் வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அது பயனளிக்குமா? என்பதை அறிய, மனிதர்களுக்கு வழங்கி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு வரை ஆகலாம். அதுவரை இந்த நோய் பாதிப்புகளை சமாளிப்பதற்காக நம்மிடம் எந்த மருத்துவ முறைகளில், என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் பயன்படுத்துவதில் தவறில்லை.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருந்தபோது, அந்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகள், நவீன மருத்துவ முறைகளை இணைந்து பயன்படுத்திதான் வைரஸ் நோயை குணப்படுத்தப்பட்டது. அதே போல் இந்தியாவிலும் ஏராளமான பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. தமிழ் மருத்துவ முறைகளான சித்த மருத்துவ முறை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறையாகும். அம்முறையைக் கொண்டு வந்து இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், அதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

இந்தியாவில் கடந்த காலங்களில் பன்றி காய்ச்சல், பறவைக் காய்ச்சல் ,டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தாக்கிய போது, அவற்றை குணப்படுத்துவதற்காக இல்லாவிட்டாலும் மனிதர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நோயின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை முக்கிய பங்காற்றியதாக சித்த மருத்துவர்கள் கூறி வருவதை நிராகரித்துவிட முடியாது இந்தியாவில் சித்த மருத்துவம் குறித்து ஆய்வு செய்யும் நோக்குடன்தான் தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் என்னால் கொண்டுவரப்பட்டது.

இதுபோன்ற வைரஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்த சித்த மருந்துகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறும் போது, அத்தகைய மருந்துகளை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தி அதன் தன்மைகளை வெளிப்படுத்த வேண்டும். இதில் தவறு ஏதும் இல்லை என்றுதான் நவீன முறை மருத்துவராக நான் கருதுகிறேன்.

அதேநேரத்தில் சித்த மருத்துவம் என்றாலே போலியான மருத்துவம் என்ற தவறான எண்ணம் சில அதிகாரிகளுக்கு உள்ளது. இந்த கண்ணோட்டம் மாற்றப்படவேண்டும். இனியாவது விழித்துக் கொண்டு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து உத்திகளையும் கையாள வேண்டும். குறிப்பாக நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்’’ இவ்வாறு கூறியிருக்கிறார் அன்புமனிராமதாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here