புதுச்சேரி
தன்னை ‘பேய்’ என்று விமர்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கிரண்பேடி அளித்துள்ள பதில் விவரம்:
“நிதி கட்டுப்பாடு இருந்தாலும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு அதிகளவு நன்மைகளை செய்வது அவசியம். மக்கள் நலத்திட்டங்களில் எவ்வித கசிவும் இல்லாமல் அவர்களிடம் கொண்டு செல்லும் பொறுப்புள்ளது. அதை நாம் மக்களிடம் சொல்ல வேண்டாம். நம் பணி மூலம் அவர்களுக்கே தெரிய வரும்.
குறிப்பாக நிலத்தடி நீர் மேம்பாடு கூட்டு முயற்சியால் நிகழ்ந்துள்ளது. நகர்ப்புற வாய்க்காலை தூய்மைப்படுத்தியதால் அரசுக்கு செலவில்லை. வெள்ளம் வராமலும் தடுக்கப்பட்டது. பல நன்கொடையாளர்களால் இது சாத்தியமானது. ஏழை மக்கள் பாதிப்பு தடுக்கப்பட்டது.
ஆனால், பேய்கள் யாருக்கும் நல்லது செய்ய மாட்டார்கள். அனைத்தும் தனக்கே தேவை என்பதை பேய்களே நினைக்கும். குறிப்பாக மக்களை பேய்கள் பயமுறுத்தும். அரசு அதிகாரிகள் பணியானது மக்களை பாதுகாப்பது தான்.
‘பேய்’ என்ற வார்த்தை வேண்டப்படாத வார்த்தை. நாகரிகமற்றது. அருவருப்பானது. அக்கருத்தை ஏற்க முடியாது,” என குறிப்பிட்டுள்ளார்.