டெல்லியில் இன்றும் கடும் காற்று மாசு: வீட்டில் முடங்கிய மக்கள்

0
16
fe

புதுடெல்லி

டெல்லியில் இன்று காலையிலும் காற்று மாசு அளவு மிக மோசமாக இருந்தது. மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு புகை மூட்டமாக காட்சியளித்தது.

டெல்லியில் தீபாவளி பண்டிகை நாள் முதல் காற்று மாசு அதிகரித்தது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது.

காற்று தரக் குறியீட்டின்படி 50 புள்ளிகள் வரை காற்று மாசு இருந்தால் ‘நல்லது’. 100 புள்ளிகள் வரை இருந்தால் ‘திருப்தி’. 200 புள்ளிகள் வரை இருந்தால் ‘மிதமானது’. 300 புள்ளிகள் வரை இருந் தால் ‘மோசம்’. 400 புள்ளிகள் வரை ‘மிகவும் மோசம்’. 500 புள்ளிகள் வரை இருந்தால் ‘ஆபத்தானது’. 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் ‘அவசர நிலைக்கு’ ஒப்பானதாகும்.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு டெல்லியில் காற்று மாசு 582 புள்ளிகளைத் தொட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம், டெல்லியில் சுகாதார அவசர நிலையை அறிவித்தது. காற்று மாசைக் குறைக்க வரும் 5-ம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக் கும் குளிர் காலம் முடியும் வரை பட்டாசுகள் வெடிக்கவும் ஆணை யம் தடை விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விடுமுறை அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அவர் நேற்று முக கவசம் வழங்கினார்.

காற்று மாசுபாடு தீவிரம் காரணமாக டெல்லியில் நேற்று காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள் முக கவசம் அணிந்து சென்றனர்.

டெல்லி மட்டுமன்றி அதனை சுற்றியுள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றுமாசு குறையும் வரை பொது மக்கள் காலை, மாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம். வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பது நல்லது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் டெல்லியில் இன்று காலையிலும் காற்று மாசு அளவு மிக மோசமாக இருந்தது. மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கினர். அடர்ந்த புகை போன்ற காற்று மாசை குறைக்க மாநகராட்சி சார்பில் லாரிகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here