ஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்!

0
115
tol cate news

பொதுமக்களுக்கான பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் அவசரகால சேவைகளை எளிதாக்குவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் என்எச்ஏஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடந்த 11 மற்றும் 14-ஆம் தேதிகளில் அனுப்பிய கடிதத்தில், ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது.

சுங்க கட்டண வசூல் என்பது அரசு கருவூலத்திற்கு பங்களிக்கக்கூடிய முக்கிய நிதி ஆதாரமாக உள்ளதாலும், பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் மீண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வசூலை வரும் 20-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) உள்ளிட்ட பல்வேறு கனரக மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்கள், சங்கங்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனிடையே, ஏப்ரல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கண்டனம் வசூல் தொடங்குகிறது.

தற்போது அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும், வாகனங்கள் சுங்க கண்டனம் செலுத்தாமல், செல்வதால்,சரக்கு வானங்களின் வாடகை கட்டணம் சீராக இருப்பதால், விலைவாசி சற்று கட்டுக்குள் இருக்கிறது. அதே வேளையில் சுங்க கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தால்,அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லக்கூடிய வாகனங்களின் வாடகை உயரும் பட்சத்தில் காய்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிடவைகளின் விலை அதிகரிக்கும்.இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினரே.

ஊரடங்கானது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,இக்காலகட்டத்தில் பெரும்பாலும் அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள் இவைகளே சுங்க கட்டண வசூல் மையங்களை கடந்து செல்லக்கூடியவை.இவ்வாறு இருக்க சுங்க கட்டண வசூல் உத்தரவானது, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை மறைமுகமாக ஊக்குவிப்பதாக தெரிகிறது.

மேலும், சரக்கு வாகனங்களுக்கான உரிய வாடகை கிடைக்கப்பெறாமல் வாகன இயக்கம் குறையும் போது, அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களின் கைகளுக்கு உரிய காலத்தில் செல்ல முடியாமல் , கள்ளச்சந்தையில் பதுக்கப்பட்டு , விலைவாசி உயர்வு ஏற்படலாம்.இதனால், 40 நாட்கள் ஊரடங்கை எதிர்கொண்டு முடங்கி, பொருளாதார சுமையை தாங்கி வரும் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் பாடு பெரும் திண்டாட்டம் ஆகிவிடும்.

நாட்டில் பொருளாதார நிலையை சமாளிக்க கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு சலுகை மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டாலும்,சுங்க கட்டணம் வசூலிப்பு போன்ற அரசின் உத்தரவு , அடித்தட்டு மக்கள் மீது இறக்கி வைக்கப்படும் பொருளாதார சுமையையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ,மத்திய அரசு 15.4.2020 அன்று வெளியிட்ட ஆணையின்படி , 20.4.2020 க்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென,மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது.

அந்த குழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை தமிழக முதலமைச்சர் அவர்களிடம் 20.4.2020 அன்று தெரிவிக்க உள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அவர்கள் முடிவெடுக்க உள்ளார்கள் . எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசு ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு ஏப்பல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள சில தளர்வுகளை நடைமுறை படுத்தினாலும், படுத்தாவிட்டாலும், ஊரடங்கு மே 3 ஆம் தேதி முடியும் வரை தமிழகத்தில் சுங்கக் கட்டண வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்.அப்பொழுதான் தமிழகத்தில் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் வைத்து, அடித்தட்டு மக்களுக்கான பொருளாதார சுமையை குறைக்க அரசு எடுக்கப்படும் சிறந்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என கருதப்படும்.இல்லையேல், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் அரசின் இந்த உத்தரவானது ,பொதுமக்களுக்கு அரசு ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியாக அமைந்துவிடும்.

ஆகவே ,பொதுமக்களுக்கான பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த,தமிழகஅரசு ,ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமும் ,வேண்டுகோளாகவும் உள்ளது.

-விஷால் வள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here