அந்தந்த நொடியின் இயல்போடு வாழ்க்கையை வாழும் ஞானிகள் குழந்தைகள். சிறு மாசு மருகூடப் புகாத குழந்தைமை உள்ளம்தான், இதுவரை உலகில் அருளப்பட்ட சிறந்த வரம். அப்பழுக்கற்ற குழந்தைகளுடைய வெள்ளந்தித்தனத்துக்கு வேறு எதையும் ஈடாகச் சொல்வது கடினம்தான். புன்னகை, அழுகை, கோபம் என அவர்களுடைய முகங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளில் கலப்படம் இருப்ப தில்லை. பார்க்கப் பார்க்க அலுக்காத குழந்தைகளின் இந்த உலகத்தைத் தன் ஒளிப்படக் கருவிக்குள் சிறைப்பிடிக்க முயன்றி ருக்கிறார் ஒளிப்படக் கலைஞர் ந.வசந்தகுமார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர், ஒளிப்படத்தை ஓவியமாக்கும் வித்தையை வசப்படுத்துவதிலேயே பெரும்பாலான நாட்களைச் செலவிடுபவர். எடுக்கிற படங்களில் திருப்தியடைந்துவிட்டால் தேடல் நின்றுவிடும் என்று சொல்லும் இவர், தன் ஒளிப்படக் கருவிக்கும் தேடலுக்கும் ஓய்வே தருவதில்லை. ‘வீ ஸ்டூடியோ’ என்னும் ஒளிப்பட நிறுவனத்தை நடத்திவரும் இவர், எளியவர்களையும் விளிம்புநிலை மனிதர்களையும் கவனப்படுத்தும் ‘வீதி ஒளிப்படக் கலை’யில் ஆர்வத்துடன் இயங்கிவருகிறார்.


