“தமிழ்நாட்டில் ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதே அனைவருக்கும் நல்லது”

0
168
nadunilai.com

மாநிலங்கள் கடந்து, தேசம் கடந்து உலகம் முழுவதும் கோலோச்சி இருக்கும் வைரஸ் ஆட்டத்தை ஊரடங்கு மூலமாக மட்டுமே ஒழித்துக் கட்ட முடியும் என்பதை பார்க்க முடிகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகள் அளவிற்கு நம் நாட்டில் பாதிப்பு இல்லை. என்றாலும் சிறுதுளி அளவில்கூட நாம் அலட்சியம் காட்டிவிட முடியாது. நமது நாட்டில் பொதுமக்களை தாண்டி மருத்துவர், போலீசார், செய்தியாளர் என அத்தனை துறையினரையும் விட்டு வைக்காமல் அதன் பரவலை விரிவுபடுத்தி வருகிறது கொரோனா.

இதில் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் அதிகம், குறைவு என்கிற பார்வை தேவையில்லை. வைரஸை ஒழித்துக்கட்ட நமது அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது குறிப்பாக வருவாய்துறை, மருத்துவதுறை, சுகாதாரதுறை, காவல்துறை, ஊடகத்துறை என எல்லோரும் பல வழியில் பங்காற்றி வருகிறார்கள். இவர்களின் சீரிய முயற்சியால் நோய் பரவலை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்பும் அதற்கு பேருதவியாக இருந்து வருகிறது.

பிரதமர் மோடி முதலில் 21 நாட்களையும் அடுத்ததாக 19 நாட்களையும் ஊரடங்கு நாட்கள் என அறிவித்தார். இது சரியான நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும். அதே நேரத்தில் இரண்டாவது அறிவிப்பு அறிவிக்கும் போது குறிப்பிட்ட சில தளர்வுகளை மாநில அரசுகள் அறிவிக்கும் அதற்கு ஏப்ரல் 20ஆம் தேதியை குறிப்பிட்டார்.

அந்தவகையில் இன்று 20 ஆம் தேதி முடிவு செய்ய வேண்டிய நிலையில் மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. இதில் டெல்லி, கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கு தொடர்வது என்று முடிவை அறிவித்து விட்டது. தமிழ்நாடு அரசு முடிவெடுப்பதற்காக ஆலோசனை செய்து வருகிறது.

நாட்டு நடப்பை வைத்து பார்க்கும்போது, ஊரடங்கை வரும் மே மாதம் 3-ம் தேதி வரையாவது நீட்டிக்க வேண்டும் என்பதுபோல் தெரிகிறது. சில இடங்களில் நோய் இல்லாதது, பொருளாதார சிக்கல், அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் என்கிற சூழ்நிலை, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு என இதையெல்லாம் கருத்தில் வைத்து ரிலாக்ஸ் செய்யலாம் என்றால், இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய அத்தனையும் வீணாக போய்விடுமோ என்பதே உண்மை. வைரஸை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், போலீசார் இறக்கிறார்கள், செய்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியே வைரஸின் தாக்கம் அதிகமானால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

தற்போது பெரிய அளவில் அரசு நடவடிக்கை மூலமாக வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. சில திடீரென அதிகரித்துவிடுகிறது. எனவே இந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும்.

எத்தனை விழிப்புணர்வு காரியங்கள் செய்தாலும் நமது நாட்டு மக்களில் சிலர் , எதையும் கணக்கில் கொள்ளாமல் போய் சிக்கிக்கொள்ளும் அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களோடு போகிற விஷயம் இல்லை இது. அலட்சியமாக விட்டால் அடியோடு அழிக்கும் கொடியது. இந்த வைரஸ். எனவே தயவு கூர்ந்து மத்திய அரசு வழி காட்டியபடி குறிப்பிட்ட சில அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எல்லாவற்றையும் முடக்கிவிடுவதே நல்லது வரும் மே 3ஆம் தேதி வரையாவது அந்த முடக்கம் இருக்கவேண்டும்.

அதுவரை மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவந்தால் போதும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here