நாசரேத் ஏப். 30 குரும்பூர் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

குரும்பூர் அருகே உள்ள நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக எஸ்பி அலுவலகத்துக்கு உளவுப்பிரிவு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நல்லூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயம் விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று குரும்பூர் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
இதனையடுத்து குரும்பூர் எஸ்ஐ பாலகிருஷ்ணன், எஸ்பி ஏட்டு சந்தோஷ், ஏட்டுகள் கண்ணன், மகேஷ் மற்றும் போலீசார் நேற்று நல்லூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நல்லூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செல்லையா மகன் முத்துக்கணேஷ்(28) என்பவர் வீட்டை சோதனையிட்டபோது, அவர் சாராயத்தை காய்ச்சி, வீட்டின் பாத்ரூமில் ஊறல் வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து முத்துக்கணேஷை கைது செய்த போலீசார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.