திருச்செந்தூர், மே 2
திருச்செந்தூரில் தையல் தொழிலாளர்கள் 50 பேருக்கு இஸ்ரோ நில ஆர்ஜித பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ் நிவாரண பொருட்களை வழங்கினார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் பணி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலதரப்பினருக்கும் இஸ்ரோ நில ஆர்ஜித பிரிவு வருவாய் அலுவலர்கள் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ நிலஆர்ஜித பிரிவு வருவாய் அலுவலர்கள் மற்றும் காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து திருச்செந்தூரில் தையல் தொழிலாளர்கள் 50 பேர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் அக்பர்ஷா உதவியால் திருச்செந்தூரில் வைத்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இஸ்ரோ நிலஆர்ஜித பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ் தையல் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நில ஆர்ஜித பிரிவு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், அனைத்து சமுதாய கூட்டமைப்பு துணைத்தலைவர் ஓடை சுகு, காயல் கண்ணன், தையல் தொழிலாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே இஸ்ரோ பணியாளர்கள் மற்றும் வருவாய் பிரிவு அலுவலர்கள் சார்பில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 100 பேர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.