புதுக்கோட்டையில் எஸ்.ஐ – கர்ப்பிணி பெண் இடையே தள்ளுமுள்ளு – தனிமைப்படுத்தல் விவகாரத்தில் தகராறு !

0
89
tuty police

தூத்துக்குடி புதுக்கோட்டை சந்தோஷ் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி முத்துராணி(வயது 26). இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆண்குழந்தை உள்ள நிலையில் தற்போது முத்துராணி இரண்டாவதாக 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். சின்னத்துரை சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார். பணி நிமித்தம் காரணமாக சின்னதுரை சென்னையிலும், முத்துராணி அவருடைய உறவினர் கருப்பசாமியின் பராமரிப்பில் சந்தோஷ் நகரிலும் வசித்து வந்தார்.

கொரோனா பணி ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சின்னதுரை-முத்து ராணியும் செல்போன் மூலமாக நலம் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நண்பர் ஒருவரின் உதவியோடு சின்னதுரை சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று தூத்துக்குடி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணிக்காக இன்று அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

காவலர் சின்னதுரை, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. அதன்பேரில் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள் வீட்டில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் தனிமைபடுத்தப்பட்ட வீடு என்கிற நோட்டீசை அதிகாரிகள் ஒட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.

இதை வீட்டிலுள்ள சிலர் ஏற்கவில்லையாம். இந்தநிலையில் காவலர் ஒருவருடன் அங்கு சென்ற புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ், அந்த வீட்டில் விசாரித்திருக்கிறார். . அப்போது கருப்பசாமிக்கும் எஸ்.ஐ க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் தள்ளுமுள்ளு என்கிற நிலைக்கு சென்றிருக்கிறது. இதில் கருப்பசாமி தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை முத்துராணி செல்போனில் படம்பிடித்திருக்கிறார். அதை கவனித்த போலீசார் அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கியிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் கீழே விழுந்த முத்துராணி மயக்கமடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here