’’சடயநேரி கால்வாயில் உபரிநீர் திறந்துவிட வேண்டும்’’ – அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கோரிக்கை !

0
14
anitharathakirushanan

சடயநேரி கால்வாயில் தண்ணீர் திறப்பதன் மூலம் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டுமென திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான அனிதா சு.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

’’தற்போது வடமேற்கு பருவமழை நல்லமுறையில் பெய்து வருகிறது. மழை மேலும் தீவிரமடையுமென வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. பாபநாசம் அணைக்கட்டில் இப்போதைய நிலவரப்படி 133 அடி தண்ணீர் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயத்திற்காக மருதூர் அணை மேலக்கால், கீழக்கால் மூலம் 31 குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் மூலம் 22 குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இக்குளங்கள் நிறம்புவதற்கு ஏற்றவகையில் மிகவும் சரியான திட்டமிடல் செய்து தண்ணீர் திறக்கப்படவேண்டும்.

தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வெளியேறும் நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உபரி நீர் கடலில் வீனாக கலக்கும் நிலையை தடுத்து சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவேண்டும்.

சடையனேரி கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்படவேண்டும். இவ்வாறு திறக்கப்படும் நீர் தூத்தக்குடி மாவட்டத்தின் உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியங்களில் உள்ள வரண்ட பகுதிகளுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக அமையும்.

சடையநேரி கால்வாயில் திறக்கப்படும் நீர் எழுவரைமுக்கி, நகனை குளம், வளுக்கு குளம், படுகை, நங்கைமொழி, வழியாக ராமசுப்பிரமணியபுரம் நீர்தேக்கத்தில் சேரும். அங்கிருந்து இரண்டு சட்டர்கள் மூலம் 176 கன அடி தண்ணீர் சடையநேரி குளத்திற்கு கிடைத்திட வேண்டும். 4 சட்டர்கள் மூலம் 324 கன அடி நீர் முதலூர் ஊராணி, பொத்தகாலன்விளை, வைரவன் தருவை வழியாக புத்தன்தருவை குளத்திற்கு சென்றடையவேண்டும். இதில் சுப்புராயபுரம் நீர் தேக்கதிலிருந்து 22 கன அடி நீர் உடன்குடி ஒன்றியம் பல்லாநேரி, புல்லாநேரி, தாங்கைகுளம் ஆகிய குளங்களுக்கு வழங்கப்படவேண்டும்.

இவ்வாறாக மிகவும் சரியான முறையில் திட்டமிட்டு நீர் வழங்குவதன் மூலம் இந்தப்பகுதியின் நிலத்தடி நீர் பெருக்கம், கால்நடைகளின் தண்ணீர் தேவை, விவசாயத்திற்கான தண்ணீர் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்படும். மேலும் கடலில் தண்ணீர் வீணாக கலப்பது தடுக்கப்படும். ஆகவே விவசாயிகளின், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய கவனத்துடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here