ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை

0
228
sps

ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் வாழை பயிர் பாசன வசதிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘’தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆறு வடகால் மற்றும் தென்கால் பகுதிகளில் பாசன வசதி பெறும் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி, மற்றும் திருச்செந்தூர் ஆகிய 4 தாலுகாக்களில் வாழை பயிரை பிரதானமாக பயிரிடும் சுமார் 14ஆயிரம் ஏக்கர் வாழை சாகுபடி விவசாயிகள் கோடைகால வறட்சி காரணமாக பயிரிடப்பட்டுள்ள விளையும் தருவாயில் உள்ள வாழை பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும், அதனை காக்க தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அதனை நான் உடனடியாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் செ.ராஜு அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் ஆகியோர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, மாவட்ட ஆட்சியரிடம் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனுவினை நேரில் வழங்கினேன்.

எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பகுதிகளில் பாசன வசதி பெறும் கருகும் நிலையில் விளையும் தருவாயில் இருந்த வாழைப் பயிர்களையும், பயிரிட்ட விவசாயிகளையும் காக்கும் பொருட்டு பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து சிறப்பு நிகழ்வாக, நாளொன்றுக்கு வினாடிக்கு 400கன அடி வீதம் 15.05.2020 முதல் 31.05.2020 வரை 17 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், நான்கு தாலுகாக்களின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உடனடியாக கருணை உள்ளத்தோடு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்த குடிமராமத்து நாயகன் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் சார்பாகவும் எனது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here