வட மாநிலங்களை பூர்விகமாகக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலை செய்து வந்தனர். கரோனா ஊரடங்கையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன் பயனாக தூத்துக்குடி மாவட்டத்தில் 8700 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 4700 பேர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நெல்லையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் சுமார் 400 பேர் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் எஞ்சியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தூத்துக்குடியிலிருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று தூத்துக்குடி ரெயில் நிலையம் அழைத்துவரப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சொந்த ஊர் திரும்புவதற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டன. அவர்களுக்கு தேவையான உணவு உணவுகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து பிற்பகலில் புறப்பட்ட இந்த ரயில் மணியாச்சி, மதுரை, சேலம் வழியாக இரண்டு நாட்களில் பீகாரை சென்றடையும்.
இந்த பணிகளை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ’’தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பீகாருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மூலமாக வடமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களும் இந்த சிறப்பு ரெயிலில் பயணிக்கின்றனர். மொத்தம் 1464 தொழிலாளர்கள் பீகார் செல்கின்றனர் அவர்களுக்கு தேவையான உணவுகளை ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது’’ என்றார்.