கூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள் வேதனை

0
1116
vivasayam

பட்ட புண்ணிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள் அப்படித்தான் ஆகிபோனது விவசாயிகளின் நிலமை. விதை விதைக்க தண்ணீர் கிடைப்பதில்லை, விளைந்த பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இதெல்லாம் கிடைத்தாலும் வேளாண்மையின் பயன் வீடு வந்து சேர்வதில்லை. அப்படித்தான் ஆண்டாண்டு காலமாக அல்லல்பட்டு வருகிறார்கள் விவசாயிகள். இதில் கொரோனா தாக்கம் காலத்தில் அல்லல் அதிகம்.

அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து மக்கள் சகஜ நிலையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், வங்ககடலில் உருவான அம்பன் புயலால் தொடர்கிறது அல்லல். நாளை கடக்க இருக்கும் புயலின் வேகம் நேற்றிலிருந்தே தெரிய ஆரம்பித்திருக்கிறது.

கடலோர மாவட்டமான தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகிறது. மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை வீசிய கடும் காற்றால் கூட்டாம்புளி, குலையன்கரிசல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருக்கும் வாழைகள் சாய்ந்து விழுந்தன. பல லட்சம் வாழைகள் ஒரே நேரத்தில் விழுந்து சேதமாகியிருப்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைப்பில் இருக்கிறார்கள்.

அறுவடைக்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அரைகுறை விளைச்சலான வாழைத்தாரை பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். கூட்டாம்புளியை சேர்ந்த பிச்சமணி நம்மிடம், ‘’வயித்தகட்டி வாயை கட்டி உழைச்சேன். இந்த வாழையை மட்டுமே முழுமையா நம்பியிருந்தேன். என் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிவிட்டது இந்த காற்று. இனி நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என்றார் கண்கலங்கியவாறு.

கூட்டாம்புளியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், ‘’நான் விவசாயம் செய்வதில் ஆர்வம் கொண்டவன். பல ஆயிரம் வாழைகள் பயிரிட்டிருந்தேன். வாழையை தாங்கி பிடிக்கிற முட்டு கம்பு கட்டியும் அதையும் இந்த காற்று சேர்த்து முறித்துவிட்டது. எனக்கு ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்துவிட்டன’’ என்றார். அதேபோல் அதே பகுதியை சேர்ந்த பட்டுமுருகேசன், ஆத்திப்பாண்டி, பிச்சக்கனி, நாராயணன் உள்ளிட்ட இன்னும் பல விவசாயிகளின் வாழைத்தோட்டம் முற்றிலுமாக அழிந்துவிட்டது.

புயல் சேதப்படுத்தியதால் மன உளைச்சலுக்காளான விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கொடுத்து உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் விவசாயிகள்.

நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here