பிரதமரிடம் கோரிக்கை வைக்க அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள் சிபாரிசு தேவைப்படுகிறதா? – பத்திரிக்கையாளர்களுக்கு ஓர் கேள்வி !

0
255
nadunilai.com

உயரத்தில் இருப்பதாக மக்கள் எவ்வளவு காலம் நம்புகிறார்களோ அவ்வளவு காலத்துக்குத்தான் மரியாதை. இது எல்லா வகைக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.

கொரோனா தாக்கத்தால் பெரிய பெரிய சாம்ராஜ்யங்களே சாய்ந்து வருவதை பார்க்கிறோம். அந்த வகையில் உதவிக் கேட்பதில் யாருக்கும் தயக்கமில்லை. பிழைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உதவி கேட்டுத்தான் ஆகவேண்டும். அப்பொழுதுதான் பழையபடி உயர்ந்த இடத்தை பிடிக்க முடியும். இதுவும் எல்லோருக்கும் பொருந்தும். என்றாலும் எதற்கும் எல்லை உண்டு.

பல்வேறு தொழில் அமைப்புகள் பின்னடைவை சந்திருப்பதுபோல் செய்தித் துறையும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்திய செய்தித்தாள் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த துறையில் சுமார் 30 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். எனவே உடனடியாக தீர்வு காண்பது அவசியம். அதனால் பாதிப்புக்களிலிருந்து மீண்டு வர அரசு உதவவேண்டும் என பத்திரிக்கையாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

அச்சுக் காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும், நாளிதழ்களுக்கு அரசுகளிடமிருந்து வரவேண்டிய விளம்பரக் கட்டண பாக்கிகளை உடனுக்குடன் கொடுக்க உத்தரவிட வேண்டும், அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.

செய்தித்தாள்களின் அகில இந்திய அமைப்பு ’இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி’ அதாவது ஐ.என்.எஸ் சார்பில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இந்தநிலையில் இந்த கோரிக்கை சம்மந்தமாக பிரதமரரிடம் அழுத்தம் கொடுக்க கட்சித் தலைவர்கள் மூலம் எம்.பிக்களை பத்திரிக்கையாளர்கள் தேடிச் சென்று வருகிறார்கள். இது அவ்வளவு சரியான நடவடியாக தெரியவில்லை.

பொதுவாக எம்.பிக்களின் ஆதரவு இருக்கிற ஒரு கோரிக்கையை பிரதமர் கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எம்.பிக்களை இவர்கள் தேடலாம் தவறில்லை. அதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவரிடமும் தேடிச் சென்று ஆதரவு கேட்பது அந்த அளவிற்கு சரியானதாக தெரியவில்லை.

தினம்தோறும் அரசியல்வாதிகள் சம்மந்தமாக நல்ல செய்தியையும் தவறையும் சுட்டிக் காட்டுகிற இடத்தில் இருந்து கொண்டு, அரசியல்வாதிகளிடம் இப்படி ஓப்பனாக உதவி கேட்பது நன்றாக இருக்காது என்றே தோன்றுகிறது. எம்.பிக்களையோ கட்சித் தலைவர்களையோ பார்த்து உதவி கேட்பது அவ்வளவு தவறா? என சிலர் கேள்வி கேட்கலாம். தவறில்லைதான், அதே நேரத்தில் உதவுகிறவர்களின் தவறை உங்களால் எப்படி சுட்டி காட்ட முடியும்? என்கிற கேள்வி எழுகிறது.

நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here