கயத்தாறில் ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருக்கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம் !

0
59
kayathar kadambur raju

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரை தலைநகரமாகக் கொண்டு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசாண்ட முத்துக்கிருஷ்ணபாண்டியன் என்ற சிற்றரசன் தனது அரசாட்சி காலத்தில் இவ்வூரின் நடுப்பகுதியில் 5 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கிழக்கு நோக்கிய முத்துக்கிருஷ்ணேஸ்வரர்( திருநீலகண்ட ஈஸ்வரர்) திருக்கோயிலை அமைத்தார்.

இந்த ராஜகோபுரத்தை அமைக்க அரசன் சீவலப்பேரியில் இருந்து தலைச்சுமையாக கற்களை குடிமக்கள் மூலம் கொண்டுவரச்செய்தான் என்றும் வரலாற்றுச் சிறப்பில் கூறப்படுகிறது. இக்கோயிலில் கற்களால் ஆன மதில்சுவர் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலில் இரு இடங்களில் நாழிக்கிணறு, இரண்டு பள்ளியறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அனைத்து தெய்வங்களும் இடம்பெற்றுள்ளன. காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இக்கோயிலில் சிவராத்திரி, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருவாதரன தேரோட்டம், பங்குனி உத்திரத் திருவிழா உள்ளிட்ட அனைத்து வகை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்துள்ளதாகவும், குறிப்பாக 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்களும் பழுதடைந்துள்ளது. இதை பழுதுபார்க்க வேண்டும் என கயத்தாறு பகுதி பொதுமக்கள், பக்தர்கள், அர்ச்சகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைச இந்து சமய அறநிலையத் துறை மூலம் திருக்கோயிலில் 5 நிலை ராஜகோபுரம் பழுதுபார்த்து புதுப்பிக்க ரூ.97.5 லட்சம், மேலும் மற்ற பணிகள் என சேர்த்து 1,34,7000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, கயத்தார் தாசில்தார் பாஸ்கரன், அதிமுக கயத்தார் ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருக்கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here