அனுமதியின்றி தாதுமணல் இறக்குமதி செய்ததாக வழக்குபதிவு செய்த விவகாரம் – விவி நிறுவனம் விளக்கம் !

0
289
vv news

மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி தாதுமணல் இறக்குமதி செய்ததாக விவி டைட்டானியம் நிர்வாகத்தின் மீதும் நிறுவனத்தின் மீதும் கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி வெளியானது. இந்தநிலையில் விவி நிறுவனத்தின் மேலாளர் பொன்சேகர் மூலம் அனுப்பட்டதாக விளக்க அறிக்கை ஒன்று நமக்கு தரப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘’ஏற்றுமதி இறக்குமதிக்கும் மாவட்ட ஆட்சியாளருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இறக்குமதி செய்து வேறு பொருள் உற்பத்தி செய்ய உபயோகிப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் ஏற்கனவே கனிமங்கள் இறக்குமதிக்கு தமிழக அரசின் விதிகளே பொருந்தாது என தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

அந்த வழக்கில் ஒரு மாவட்ட ஆட்சியரும் பிரதிவாதி. அவருக்கும் இந்த நிலை தெரியும். நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக இல்மனைட் இறக்குமதி செய்து வருகிறோம். இறக்குமதி செய்யப்பட்ட இல்மனைட் விபரங்களை மாவட்ட ஆட்சியருக்கும், சார் ஆட்சியருக்கும் பதிவு தபாலில் தெரியப்படுத்தி வருகிறோம். திடீரென்று சமூக ஆர்வலர் எனும் ஒரு நபர் அவர் மகன் மூலம் எங்கள் உரிமையாளரை அணுகி தனக்கு மாதத்திற்கு ஒரு பெரிய தொகை மாமூலாக தர வேண்டும் என்றும் அல்லது தொழில் செய்ய விட மாட்டேன் என்றும், எல்லா மாவட்ட ஆட்சியர்களும் தனக்கு வேண்டிய தங்க முனியசாமி சொல்லை கேட்க வேண்டும் என அறிவுரை பெற்று கொடுத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ள தங்க முனியசாமியை பெரும் தொகை செலவு செய்து தலைமை அலுவலகத்தில் பணி நியமித்து இருப்பதாகவும், அவர் மூலம் அவ்வப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி வருவதாகவும் மிரட்டி பணம் கேட்டார். எங்கள் நிறுவனம் சமூக ஆர்வலர் என்ற மிரட்டல் பேர்வழிக்கு பணம் கொடுக்க மறுத்தது.

உடனே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி துறைமுக சபைக்கு தொலைபேசியில் தெரிவித்து இல்மனைட் கப்பலை துறைமுகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காதீர்கள் என நடுக்கடலிலேயே நிற்க வைத்து விட்டார். எங்கள் கிளியரிங் ஏஜெண்ட் இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் இறக்குமதிக்கு தமிழக விதிகளே பொருந்தாது எனும் போது இறக்குமதியை தடை செய்ய முடியாது என கூறி இடைக்கால உத்தரவு தந்தது. அதன் அடிப்படையில் இல்மனைட் இறக்குமதி செய்யப் பட்டன. பிறகு துறைமுகத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என மாவட்;ட ஆட்சியர் கோருவதாக கூறி எங்கள் சரக்கை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. மீண்டும் கிளியரிங் ஏஜெண்ட் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உடனடியாக துறைமுக சபையில் இருந்து நாங்கள் சரக்கை தடுக்கவில்லை என கூறினார்கள். அதனை பதிவு செய்து நீதிமன்றம் அந்த மனுவை முடித்தது.

நேற்று முன் தினம் உதவி இயக்குனரும், வட்டாட்சியரும் வந்து மாவட்ட ஆட்சியர் இந்த சரக்கை நீங்கள் உபயோகிக்க மாட்டோம் என வாக்குமூலம் பெற்று வர சொல்கிறார் என கூறினார்கள். இதனை உபயோகிக்க வில்லை என்றால் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் 700 தொழிலாளர்களின் பணி பாதிப்பு அடையும். நாங்கள் சரக்கு கொடுக்க வேண்டிய நபர்கள் பாதிப்பு அடைவார்கள். சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு பணம் செலுத்தி கொள்முதல் செய்யப் பட்ட இல்மனைட்டிற்கு இறக்குமதி வரியாக மட்டும் 75 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளோம். மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த வேண்டதகாத நடவடிக்கைகளால் கப்பல் கம்பெனி, லாரி போக்குவரத்து, ஏற்றி இறக்குதல், காலதாமதம் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எங்கள் நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த இல்மனைட்டை நாங்கள் உபயோகிக்க கூடாது என்றால் நீங்களோ அல்லது மாவட்ட ஆட்சியரோ எங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவிடுங்கள் என கூறினோம். மாவட்ட ஆட்சியர் எழுத்து மூலம் எதுவும் கொடுக்காதீர்கள் என கூறியதாக கூறி திரும்ப சென்று விட்டார்கள்.

தற்போது கிராம நிர்வாக அலுவலரை வைத்து இந்த புகாரை கொடுத்துள்ளார்கள். கனிமங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கு கனிம சட்டமே பொருந்தாது என்பதை இந்திய அரசு தெரியப்படுத்தி உள்ளது. ஏற்றுமதி இறக்குமதி அன்னிய வாணிப சட்டப்படி நடைபெறும் ஒரு செயல். அந்த சட்டப்படி எந்த மாநில அரசு அதிகாரிகளுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப் படவில்லை என மத்திய அரசு தெரியப்படுத்தி உள்ளது. அதேபோல் கனிம சட்டம் பிரிவு 4(1-எ) படி கனிம போக்குவரத்திற்கு விதிகள் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் தமிழக அரசு தெரியப்படுத்தி உள்ளது. மேலும் கனிம சட்டப்படியும் கூட மாவட்ட ஆட்சி தலைவர் தான் நீதிமன்றத்தில் தனி புகாராக தாக்கல் செய்யலாம். இதனையும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது இரண்டே இரண்டு டைட்டானியம் நிறுவனங்கள் தான் உள்ளன. ஒரு கேரளாவில் திருவாங்கூர் டைட்டானியம் மற்றொன்று தமிழ்நாட்டின் விவி டைட்டானியம் நிறுவனம் ஆகும். உலக டைட்டானியம் மார்க்கெட்டில் ஏகபோக கோலோச்சுவதற்காக சில அன்னிய நிறுவனங்கள் இங்குள்ள சில சமூக விரோதிகளையும் சில அதிகாரிகளையும் உபயோகித்து இவ்வாறான தவறான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது.

இது பற்றி நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்ய உத்தரவிடுவதோடு இம்மாதிரி தவறு செய்யும் அலுவலர்கள் மீது மத்திய புலனாய்வு துறை மூலம் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்க உள்ளோம் என கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ள இடைக்கால தடை உத்தரவில் கனிமங்கள் இறக்குமதிக்கு தமிழக விதிகள் பொருந்தாது என குறிப்பிட்டு உத்தரவு கொடுத்துள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் பிரதிவாதியாக உள்ளார். எனவே சட்ட நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர் மூலம் இந்த புகாரை செய்து இருக்கலாம் என இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here