தமிழகம், ஆந்திரா சேர்ந்த 713 பயணிகளுடன் ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி வந்தடைந்தது !

0
81
srilanga ship

தூத்துக்குடி

கொரோனா முன்னெச்சரிக்காக வான் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களையும் சமுத்திரசேது என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி இலங்கையில் சிக்கித்தவித்த தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 713 பேரை ஐ.என்.எஸ். ஜலஸ்வா என்ற போர் கப்பல் மூலமாக இன்று தாயகம் அழைத்து வந்தனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் நிலக்கரி இறங்குதளத்தில் அனுமதிக்கப்பட்ட கடற்படை கப்பலிலிருந்து ஒவ்வொருவராக சமுக இடைவெளியுடன் தரையிறக்கப்பட்டனர். இந்த கப்பலில் தமிழ்நாட்டை சார்ந்த 693 பேர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், புதுச்சேரி யூனியனைச் சேர்ந்த ஒருவர், கர்நாடக மாநிலத்தை சார்ந்த 2 பேர் உள்பட 713 பயணிகள் வந்தனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் பேருந்து மூலம் குடியுரிமை பரிசோதனை முனையத்திற்கு அனுப்பிவைக்கபட்டனர். அங்கு குடியுரிமை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அளித்த பேட்டியில், ‘’ஊரடங்கு காரணமாக இலங்கையில் சிக்கித்தவித்த 713 இந்திய பயணிகளுடன் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 693 பேர் உள்ளனர். கர்நாடகம்,புதுச்சேரி, ஆந்திரா, கேரளாவை உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த நபர்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அறிகுறி உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப் படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை துறை அதிகாரிகளின் சோதனை அடுத்து அவர்கள் பஸ்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதுபோல வருகிற 7ஆம் தேதி மாலத்தீவில் இருந்து இந்தியர்களை தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்திய கடற்படை கப்பல் அழைத்து வருகிறது. அடுத்ததாக 17-ஆம் தேதி ஈரானில் இருந்து கப்பல் வருவதாக தகவல்கள் வந்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here