’’அதிகாரிகள் துணையோடு சமூக ஆர்வலர் போர்வையில் விவி நிறுவத்திடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்’’ -தொலைபேசி உரையாடல் ஆதாரத்துடன் மேலாளர் பேட்டி

0
460
v v news

தாது மணல் என்று நினைத்தாலே விவி நிறுவனம்தான் நினைவுக்கு வரும் அந்த அளவிற்கு தாது மணல் தொழிலிலும் அது சார்ந்த சர்ச்சையிலும் அடிக்கடி பெயர் அடிபடுவது விவி டைட்டானியம் தொழிற்சாலைதான்.

நம்நாட்டில் முன்பு போல் அவர்களின் இந்த தொழில் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. தாது மணல் எடுக்கவும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் அதற்கு காரணம் என்கிறார்கள்.

இறக்குமதிக்கு இருக்கு அனுமதியை வைத்து விவி நிறுவனம் தற்போதும் அந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சட்டவிரோதமாக 10,500 மெட்ரிக் டன் தாதுமணல் பதுக்கி வைத்திருந்ததாக அந்நிறுவனத்தின் மீது 420, 379, 21(1), 21 (4ஏ), 21 (4), MMDR Act ஆகிய பிரிவுகளின் கீழ் சிப்காட் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

இந்தநிலையில் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த விவி டைட்டானியம் நிறுவனத்தின் மேலாளர் பொன்சேகர், ‘’அரசு அதிகாரிகள் துணையோடு சமூக ஆர்வலர் போர்வையில் விவி தொழிற்சாலை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அதற்கான தொலைபேசி உரையாடல் எங்களிடம் இருக்கிறது’’ என்று தெரிவித்ததோடு அதனை வாட்ஸ் அப் மூலம் செய்தியாளர்களிடம் வழங்கினார்.

மேலும் அவர், ‘’தூத்துக்குடி விவி பிக்மெண்ட்ஸ் தொழிற்சாலை தயாரிப்பின் மூல பொருட்களில் ஒன்றான இல்மனைட் வெளிநாட்டில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் அனுமதியோடு முறையான வரிகள் செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் ஒருவர் விவி பிக்மெண்ட்ஸ் உரிமையாளரின் நண்பரிடம் தொலைபேசி மூலம் பேசி நீங்கள் இறக்குமதி செய்யும் இல்மனைட் மண்ணிற்கு டன் ஒன்றிற்கு ஒரு தொகை என தனக்கு கமிஷன் கொடுத்தால் மட்டுமே நீங்கள் தொழில் நடத்த முடியும், இல்லையென்றால் தனக்கு இருக்கும் அரசு அதிகாரிகள் செல்வாக்கு மூலம் தொழிற்சாலையை இயங்க விடமாட்டேன், எனக்கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுகிறார். இதற்கு பதிலளித்த விவி நிர்வாகம் முறையான அனுமதியோடு தொழிற்சாலை இயக்கி வரும் நாங்கள் கமிஷன் ஏன் கொடுக்க வேண்டும், தர முடியாது என்று தெரிவித்த உடன் அந்த நபர் லஞ்ச ஒழிப்பு துறையால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள கனிமவளத்துறை இணை இயக்குனர் தங்கமுணியசாமி உதவியுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் ஒன்றை கொடுக்கிறார்.

புகார் குறித்து விவி நிறுவனத்திடம் விளக்கம் கேட்காமல், அரசு விதிகளை பின்பற்றாமல், உண்மை தனமை அறியாமல் இறக்குமதி செய்யப்பட்ட இல்மனைட் மணலை வெளியே அனுமதிக்க கூடாது என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த புகாரை அப்படியே தூத்துக்குடி துறைமுக சுங்கத்துறை அதிகாரிக்கு அறிக்கை அனுப்புகிறார். ஆனால் மத்திய அரசின் அனுமதியோடு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, இதனை தடை செய்ய முடியாது என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனை தொடர்ந்து இல்மனைட் தொழிற்சாலை கொண்டு வந்த உடன் மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் ஆலையை இயங்கவிடாமல் அரசு அதிகாரிகள் துணையோடு மிரட்டி வருகிறார் அந்த நபர். தனக்கு பணம் கொடுக்காமல் இருந்தால் தொடர்ந்து ஆலையை இயங்க விட மாட்டேன் என்று மிரட்டுகின்ற பேரம் பேசுகின்றதுதான் இந்த ஆடியோ. இதன் மூலம் பணத்திற்காக மாமூல் கேட்டு மிரட்டும் சமூக ஆர்வலர் போர்வையில் இயங்க கூடிய நபருக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரிகிறது.

இந்தியாவில் தற்போது இரண்டே இரண்டு டைட்டானியம் நிறுவனங்கள் தான் உள்ளன. ஒரு கேரளாவில் திருவாங்கூர் டைட்டானியம் மற்றொன்று தமிழ்நாட்டின் விவி டைட்டானியம் நிறுவனம் ஆகும். உலக டைட்டானியம் மார்க்கெட்டில் ஏகபோக கோலோச்சுவதற்காக சில அன்னிய நிறுவனங்கள் இங்குள்ள சில சமூக விரோதிகளையும் சில அதிகாரிகளையும் உபயோகித்து இவ்வாறான தவறான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது.

இது பற்றி நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்ய உத்தரவிடுவதோடு இம்மாதிரி தவறு செய்யும் அலுவலர்கள் மீது மத்திய புலனாய்வு துறை மூலம் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்க உள்ளோம்’’ என்றார் விவி பிக்மெண்ட்ஸ் பொதுமேலாளர் பொன்சேகர்.

அந்த சமூக ஆர்வலர் யார் என்று கேட்டோம், ‘’விவி நிறுவனத்தோடு தொழில் போட்டியில் இருக்கிற இன்னொரு கம்பெனியின் ஆதரவாளர்தான் அந்த சமூக ஆர்வலர்’’என்கிறார்கள். ஆடியோவில் அவர் பேரம் பேசுவதும் அதிகாரியிடம் இருக்கும் தொடர்பு குறித்தும் பேசுவதும் ஆதாரமாக இருக்கிறது.

இவர்களின் பேரம் எவ்வளவு உயரத்திலிருந்து பிரப்பிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. விஸ்பருபம் எடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்த கதி போல் இதற்கும் வந்துவிடாமல் இருந்தால் சரி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here