தூத்துக்குடியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட திரேஸ்புரம் விவேகானந்தர் நகர், முத்தரையர் நகர், மாதவன்நாயர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் இருந்தது. 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வருவதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காக வெகுதூரம் சென்று தண்ணீர் பிடித்துவரும் நிலை இருந்தது. இதுகுறித்து தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதிக்கு குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.
அதனடிப்படையில் கோரிக்கை மனுவை பரிசீலித்த எம்எல்ஏ கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் முத்தரையர் நகர், விவேகானந்தர் நகர், மாதவன் நாயர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 6 வீடுகளுக்கு ஒரு குடிநீர் குழாய் என்ற வீதத்தில் குடிநீர் குழாய் இணைப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் குடிநீர் குழாய் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கீதா ஜீவன் எம்எல்ஏ கலந்து கொண்டு குடிநீர் குழாய் இணைப்புகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
அப்போது கூடிய அப்பகுதி மக்கள், சாலை வசதி ஏற்படுத்தி தரவும், வீடுகளுக்கு தீர்வை ரசீது கிடைக்க ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ.பருவகால மழைக்கு முன்னர் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.