செய்துங்கநல்லூர் அருகேயுள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் விக்கிரமாதித்தராஜபாண்டி(49). இவர் கார் வாங்கி விற்கும் தரகுத் தொழில் செய்து வந்த இவரை இவரது காதலி சித்ரா உள்பட 4 பேர் சேர்ந்து விக்கிரமாதித்தராஜபாண்டியின் தலையை துண்டித்து கொலை செய்து புதியம்புத்தூர் வாணியன்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் தலையை வீசிவிட்டு சடலத்தை தட்டப்பாறை பகுதியில் புதைத்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, அவரை கொலை செய்த நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், விக்கிரமாதித்தராஜபாண்டியை கொலை செய்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் மகன் சக்திவேல்(23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா மகன் முத்துக்கனிராஜ்(21) ஆகிய இருவரும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்:1இல் நேற்று சரணடைந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், குற்றவியல் நீதிமன்ற எண்:1-ன் நடுவருமான (பொறுப்பு) முரளிதரன் இருவரையும் இம்மாதம் 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சரணடைந்த இரு இளைஞர்களையும் போலீஸார் தூத்துக்குடியையடுத்த பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனர்.