அம்மன்புரம் அருகே விவசாயி மீது கொலைவெறி தாக்குதல் – ஒருவர் கைது சகோதரர்கள் 4 பேருக்கு வலை !

0
160
attack news

நாசரேத், ஜூன் 9- அம்மன்புரம் அருகே விவசாயி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஒருவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய சகோதரர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.

அம்மன்புரம் அருகே உள்ள மேலப்புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் அழகேசன்(56). விவசாயியான இவர் அம்மன்புரம் சீனிமாவடிகுளத்தை மீன்பிடி குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி குரங்கன்தட்டை சேர்ந்த சிலர் குளத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற அழகேசன் மீன் பிடிப்பதற்காக குளத்தை நான் குத்தகைக்கு எடுத்துள்ளதால், நீங்கள் மீன்பிடிக்க கூடாது என்றும், மீறினால் போலீசில் புகார் செய்வேன் என்று மிரட்டியதால் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் மறுநாளான நேற்று முன்தினம் மதியமும் குரங்கன்தட்டை சேர்ந்த சிலர் மீண்டும் அதே பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு சென்ற அழகசேன் மற்றும் அவரது உறவினர்கள் மீன்பிடித்து கொண்டிந்தவர்களை திட்டியதும், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், குரங்கன்தட்டு அருகே உள்ள இசக்கியம்மன் கோயில் மொட்டை மடை அருகே அழகேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த குரங்கன்தட்டை சேர்ந்த முத்துப்பாண்டி(46), சங்கிலி மகன்கள் சேகர், கருப்பசாமி, சந்தனமுத்து, அரிராமன் ஆகிய 5 பேரும் அழகேசன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அழகேசனை, அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் எஸ்எஸ்ஐ குருசாமி வழக்குப்பதிவு செய்தார். எஸ்ஐ குமார் விசாரணை நடத்தி முத்துப்பாண்டியை கைது செய்து, தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகிறார். இதேபோல் குரங்ன்தட்டு கோவில் தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முத்துராமன்(13) அளித்த புகாரின்பேரில் அழகேசன் மீது குரும்பூர் போலீஸ் எஸ்ஐ குமார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோதல் சம்பவத்தால் மேலப்புதுக்குடி, அம்மன்புரம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here