அயோத்தி வெற்றி தந்த உத்வேகம்.. கேரளா, தமிழகம் பக்கம் திரும்பும் பாஜக!

0
675
bjp news

டெல்லி: அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருப்பது, பாஜக கட்சிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இனி பாஜக தென்னிந்தியா மீது தன்னுடைய கவனத்தை செலுத்தும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். பாஜக கட்சிக்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது.

வாய்ப்பு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கியது, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது, அயோத்தி வழக்கு இது மூன்றும் பாஜகவிற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. அந்த கட்சி தொட்டதெல்லாம் வெற்றிதான் என்று நிலைதான் உருவாகி உள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு இன்று மூன்று விஷயங்களும் பிரச்சாரத்தின் போது பெரிய அளவில் உதவும்.

தென்னிந்தியா

ஆனால் தென்னிந்தியாவில் பாஜகவால் இந்த மூன்றையும் கூறி வாக்குகள் கேட்க முடியாது. அதிலும் தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் இன்னும் தீவிரமாக பணிகளை கவனிக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே அந்த கட்சி பணிகளை தொடங்கிவிட்டது. அதில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வெற்றியையும் அந்த கட்சி பெற்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

கேரளா எப்படி

கேரளாவை பொறுத்தவரை பாஜக தனிப்பெரும் கட்சியாக இல்லை. ஆனால் அங்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாஜக களமிறங்கி பணியாற்றி வருகிறது. அம்மாநிலத்திற்காக சினிமா நடிகர் ஒருவரை கட்சித் தலைவராக நியமிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. கடந்த வருடம் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தாலும், இந்த முறை அது வெற்றிபெறும் என்று கூறுகிறார்கள். விரைவில் அங்கு அதிரடி மாற்றம் நடக்க உள்ளது.

வடகிழக்கு மாநிலம்

வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மையினர் இருந்தாலும் கூட பாஜக அங்கு லோக்சபா தேர்தலில் நன்றாக வென்றது. அதே பார்முலாவை பாஜக கேரளாவிலும் கடைபிடிக்கும். 2021ல் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது எதிர்க்கட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று பாஜக மிக தீவிரமாக முயன்று வருகிறது.

மேற்கு வங்கம் எப்படி

அதேபோல் பாஜகவின் இன்னொரு சிம்ம சொப்பனமாக விளங்கிய மேற்கு வங்கம் லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு நிறைய இடங்களை பெற்றுக் கொடுத்தது. அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் மொத்தமாக வாக்குகளை இழந்துள்ளது. பாஜக அங்கு தற்போது எதிர்க்கட்சி போல செயல்பட்டு வருகிறது. 2021ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் பாஜக கண்டிப்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக மாறும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆந்திரா தெலுங்கானாவில் பாஜக நேரடியாக ஆட்சி அமைக்கவில்லை என்றாலும், கண்டிப்பாக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார்கள். பீகாரில் நிதிஷ் குமார் உடன் நட்பாக இருப்பது போல, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பாஜக நட்பாக இருக்கும். எதிர்கால கூட்டணிக்கு வாய்ப்புள்ளது. தெலுங்கானாவிலும் இதே கதைதான் என்கிறார்கள். கர்நாடகாவில் ஏற்கனவே தாமரை மலர்ந்துவிட்டது!

தமிழகம் எப்படி

பாஜக வரிசையாக பல விஷயங்களில் வெற்றியை குவித்துக் கொண்டு இருந்தாலும், இன்னும் தமிழகத்தில் அந்த கட்சியால் பெரிதாக கால் வைக்க முடியவில்லை. ஆனால் அடுத்த 2021 சட்டசபை தேர்தலிலும், வரும் உள்ளாட்சி தேர்தலிலும் கண்டிப்பாக பாஜக தமிழகத்தில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் என்று கூறுகிறார்கள். அதிமுக கூட்டணி பாஜகவிற்கு பெரிய அளவில் உதவி வருகிறது. சட்டசபை இடைத்தேர்தலிலேயே இது தெரிந்தது.

பெரிய கூட்டணி

பாமக, தேமுதிக வாக்கு வங்கி, அதிமுகவின் தொண்டர் படை ஆகியவை பாஜகவிற்கு பெரிய அளவில் உதவும். அதேபோல் ரஜினி எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால் அவரின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதெல்லாம் போக தமிழக பாஜகவிற்கு மிகவும் வலுவான ஒரு தலைவர் விரைவில் வர இருக்கிறார். அவரின் வருகைக்கு பின் கட்சி பெரிய வளர்ச்சி அடையும் என்றும் கூறுகிறார்கள்.

அகண்ட பாரதம்

வரிசையாக தான் நினைத்த விஷயங்களில் எல்லாம் பாஜக வெற்றிபெற்று வருகிறது. பாஜகவின் மிகப்பெரிய கனவு என்றால் அது ராமர் கோவில் என்பதை விட அகண்ட பாரதம் என்றுதான் கூற வேண்டும். இந்தியா முழுக்க ஒரே கட்சி, தங்கள் கட்சி மட்டுமே ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதில் பெரிய அளவில் அந்த கட்சி வெற்றியை பெற்று வருகிறது என்றும் கூறலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here