தண்ணீர் தட்டுப்பாடு இல்லை எனக்கூறும் அமைச்சரின் பேச்சு வேடிக்கையானது – தூத்துக்குடியில் மா.கம்யூ உ.வாசுகி பேட்டி !

0
24
vaasuki news

தூத்துக்குடி ஜூன் 18

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தூத்துக்குடியில் இன்று(18.06.2019) செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.


அப்போது, ’’தமிழகத்தின் முக்கிய பிரச்சினை குறித்து பேசவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருங்கால அரசியல் குறித்து பேசவும் இந்த கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் உட்புகுத்துவது தொடர்ந்து வருகிறது. விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி பல்வேறு அடக்குமுறை செய்து சேலம் 8 வழி சாலை திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்த முயற்சிக்கிறது.


டெல்டா மாவட்டங்களான தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
அதுபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீது அரசாணை வெளியிட்டு ஆலையை மூடியபிறகு ஆலை தொடர்ந்து இனி இயங்குமா? இயங்கதா? என்பது தொடர்பான சந்தேகத்துக்கு இன்று வரை அரசு சட்டம் இயற்றி ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவில்லை.


இவை எல்லாம் பார்க்கையில் அரசாங்கம் எடுக்கும் கொள்கை முடிவுக்கு மாறாக யாரும் பேச கூடாது என்ற அதிகாரத்தில் ஆளும் அரசு போலீசாரை வைத்து ஒடுக்குமுறைகளை கையாள்கிறது. தமிழகத்தில் போலீஸ் ராஜ்யமாக நடத்துகிறது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த அடக்குமுறையை, ஒடுக்குமுறையை ஒருபோதும் சகித்து கொள்ளாது. மக்களில் கருத்துரிமைகளை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருத்து உரிமை பாதுகாப்பு இயக்கம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் 100 நாள்கள் மேலாகிறது. முகிலனை கண்டுபிடிப்பதில் தமிழக காவல்துறை மெத்தன போக்கில் செயல்படுகிறது. இந்த விஷயத்தில் காவல்துறை தன் திறன் முழுவதும் பயன்படுத்தி முகிலணை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.


தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை மிக பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது. ஆனால் அதை மறுக்கும் விதமாக அமைச்சர் வேலுமணி பேசியது வேடிக்கையாக உள்ளது. சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்க கூடிய 4 நீர்நிலை தேக்கங்களிலும் சேர்த்து மொத்தம் .23சதவீதம் தான் குடிநீர் உள்ளது.


பிஜேபி அரசின் நிதி ஆயோக் கூட்டத்தின் ஆய்வு அறிக்கை படி இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கிறது என கூறப்பட்டுள்ளது. நாட்டில் 60% பேர் கடுமையான குடிநீர் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் 2030- ஆண்டுக்குள்
தேவைக்கும் குறைவாக தான் குடிநீர் கிடைக்கும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மத்திய, மாநில அரசுகள் இந்த எச்சரிக்கையை புரிந்துகொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஆண்டுக்கு 20 நாள் கூட வேலை தருவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடரம், விளாத்திகுளம் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தூத்துக்குடியில் 10 நாளுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் சமூக விரோதிகளின் கை ஓங்கி உள்ளது. நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. கொள்ளப்படவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் காவல் நிலையத்தில் சரியான நேரத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பிஜேபி கட்சி மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க கூடிய கட்சி. மதசார்பற்ற இந்தியாவை மதத்தின் பெயரால் அவர்கள் விரும்புகிற இந்து ராஜ்ஜியமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றும் முனைப்பில் நாங்கள் பிரச்சாரம் செய்ய போகிறோம். தமிழகத்தில் பற்றி எரிகிற பிரச்னையைச் மறைக்க ஆட்சியாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்ப என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் மக்கள் ஏமாற தயாரில்லை.


தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னமும் கட்சிக்குள் இதற்கான நெருக்கமான ஒருங்கிணைப்பு தேவை என்பதால் அதை செய்து வருகிறோம்.


தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என மக்கள் எதிர் பார்க்கிறார்கள். அதை நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here