ஸ்ரீவைகுண்டம், ஜூன்.12:
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தினை மானியத்துடன் பெற்றிட விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலமாக ‘நுண்ணீர் பாசனத்திட்டம் மற்றும் துணைநிலை நீர் மேலாண்மை பணிகள் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் ஆகியவை சிறுகுறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. இதற்காக 2020&21ம் ஆண்டிற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்கு ரூ.30.52லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
துணைநிலை நீர் மேலாண்மை பணிகள் திட்டத்தின் கீழ் 50சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25ஆயிரமும் அல்லது ஆயில் என்ஜின் வாங்குவதற்கு ரூ.15ஆயிரமும், பைப்லைன் அமைக்க ரூ.10ஆயிரமும், தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ.40ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. இதில், விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.90ஆயிரம் வரையில் மானியம் வழங்கப்படுகிறது.
துணைநிலை நீர் மேலாண் பணிகள் திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன திட்ட பயனாளிகள் மட்டுமே இணைய முடியும். இதற்காக ரூ.15லட்சம் நிதி இலக்கு இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே மேற்கண்ட திட்டங்களில் பயன்அடைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், கணினி பட்டா, நிலவரைபடம் மற்றும் வருவாய்த்துறை மூலமாக பெறப்பட்டுள்ள சிறுகுறு விவசாயி சான்றுடன் ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அல்லது தங்கள் பகுதிகளிலுள்ள வேளாண்மை அலுவலரையோ உடனடியாக அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.