’’விபத்தில்லாமலும் காவல்துறையினர் பணியிலிருக்கும் போது இறந்தால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும்’’ – உயர் நீதிமன்றம்

0
76
police news

நித்யானந்தம் என்பவர் தமிழ்நாடு அதி விரைவுப் படையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஜோலார்பேட்டை இருப்புப் பாதை காவல்துறை கண்காணிப்பாளர் அவரை ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார். அதன்படி நித்யானந்தம் மற்ற காவலர்களுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.

அனைவரும் புகை வண்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் நித்யானந்தத்தை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்தே அவரை மற்ற காவலர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கும் முன்பே இறந்து போனார். இது குறித்து ஜோலார்பேட்டை இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு நித்யானந்தத்தின் மனைவி புவனேஸ்வரி தமிழ்நாடு காவல்துறையினர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையை பெற ஒரு விண்ணப்பத்தை காவல்துறை இயக்குனரிடம் அளித்தார். அந்த விண்ணப்பம் அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அரசு நித்யானந்தம் இயற்கையாக மரணமடைந்துள்ளார். விபத்தில் இறக்கவில்லை. இயற்கையாக மரணமடைந்த காவலர்களுக்கு இழப்பீடு தொகை கிடையாது என்று கூறி புவனேஸ்வரியின் மனுவை நிராகரித்தது. அந்த தகவலை காவல்துறை இயக்குனர் 12.12.2009 ஆம் தேதியிட்ட ஒரு குறிப்புரை மூலம் புவனேஸ்வரிக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து புவனேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி புவனேஸ்வரிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’’நித்யானந்தம் காவலராக பணியாற்றி வந்ததும், அவர் பணியாற்றும் போது மாரடைப்பால் இறந்ததும் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. புவனேஸ்வரியின் இழப்பீட்டு மனுவை அரசு நிராகரித்தது சரியா என்பதை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறையினர் காப்பீட்டுத் திட்ட விதிகள் என்கிற தலைப்பில், தமிழ்நாட்டில் காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற காவலர்களுக்காக ஒரு குழு காப்பீட்டுத் திட்டத்தை (Group Insurance) உருவாக்கி இருந்தது. அதற்கான விதிகள் குறித்து 18.08.1996ஆம் தேதி G. O. Ms. No – 1160 (Home) (Po I-XII Dept) என்கிற எண்ணில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டு அந்த திட்டம் 01.04.1997 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவுடன் இணைக்கப்பட்டிருந்த விதிகளில் விதி 1 ஆனது அந்த விதிகளின் நோக்கம் குறித்து விவரிக்கிறது. அதனை வாசித்து பார்த்தால் ஒரு காவல்துறை அதிகாரி அல்லது காவலர் பணியிலிருக்கும் போது இறக்க நேரிட்டால் அவருக்கு இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு தகுதியுடையவர் எனவும், அவரது இறப்பானது விபத்தின் காரணமாக ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் தெரிய வருகிறது.

அரசால் உருவாக்கப்பட்டுள்ள அந்த நிதி தொகுப்பானது தமிழ்நாட்டில் காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உதவி புரியும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதியில் விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனம் அல்லது நிரந்தர பகுதி ஊனம் போன்றவை பணியில் இருக்கும் போது ஏற்பட்டால் அந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

அந்த இணைப்பில் விதி 2(b)- ல் இறப்பு பலன்கள் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், இறந்து போனவரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அந்தப் பயனை பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இறப்பு பலனுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை, மேலே சொன்ன விதிகளின் நோக்கத்துடன் சேர்த்து ஒரு சேர வாசித்து பார்த்தால், பணியிலிருக்கும் போது இறந்து போன காவலரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அந்தப் பயனை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்பதும், அந்த இறப்பானது விபத்தினால் ஏற்பட்ட இறப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் தெரிய வருகிறது. உயிரிழப்பானது அந்த காவல் அதிகாரி பணியிலிருக்கும் போது ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிற ஒரே நிபந்தனை மட்டுமே அரசாணையில் காணப்படுகிறது.

எனவே அரசு நித்யானந்தம் விபத்தால் இறக்கவில்லை என்பதால் இழப்பீட்டுத் தொகை கிடையாது என்று புவனேஸ்வரியின் மனுவை நிராகரித்தது சட்டப்படி ஏற்புடையதல்ல. அரசாணையின் விதி 3 ல் கூறப்பட்டுள்ள விதிவிலக்குகளில் இயற்கையாக மரணம் ஏற்பட்டால் அந்த திட்டத்தின் கீழ் பலனை பெற இயலாது என்று சொல்லப்படவில்லை.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான காப்பீடு திட்டம் பணியின் தன்மையை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். காவல்துறையினர் நேரம் காலம் பார்க்காமல் மக்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் மட்டுமே காப்பீட்டு பணம் உண்டு என்றால் அந்த திட்டத்தின் நோக்கமே சிதைந்துவிடும்.

பணியில் இருக்கும் போது காவல்துறையை சேர்ந்த ஒருவர் இறக்க நேரிட்டால் அவரால் நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ வாரிசுக்கு ரூ. 10 லட இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அந்த பயனை விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனத்திற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று சுருக்கக்கூடாது. காவல்துறையினருக்கு அரசு சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

எனவே புவனேஸ்வரிக்கு இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் அரசு ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here