ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை கோரிய எஸ்.ஜோயல் வழக்கு – செப்டம்பர் 11ம் தேதி இறுதி விசாரணை

0
86
srivaikundam anai news from joel

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை மேலக்கால்-கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால்-தென்கால் பாசனவாய்க்கால்கள் மூலமாக சுமார் 46ஆயிரத்து 107ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் கடந்த 15வருடங்களுக்கு முன்பு வரை ”பிசானம், கார், அட்வான்ஸ் கார்” என முப்போக நெற்பயிர் சாகுபடி முறையாக நடைபெற்று வந்தது. இதனால் விவசாயப்பெருங்குடி மக்கள் ஒரளவிற்கு வருமானம் பெற்று கடன் இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு 20எம்.ஜி.டி.திட்டத்தில் தினமும் 9கோடியே 20லட்சம் லிட்டர்(20மில்லியன் காலன்) தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பின்பு தாமிரபரணி பாசனக் கால்வாய்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதே அரிதாகி, முப்போக நெற்பயிர் சாகுபடியானது ஒருபோக நெற்பயிர் சாகுபடியாக மாறிப்போய் விட்டது. அதோடு கிராமங்களுக்குரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களில் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவித்தும் வருகின்றனர். மேலும், விவசாய நிலங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரானது உவர்ப்பாக மாறி விவசாயமும் நலிவடைந்து கொண்டே வருகிறது.

தாமிரபரணி பாசன விவசாயப்பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் ”ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரத்தரமாக தடை விதிக்கவேண்டும்” என்று தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மாண்புமிகு., தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது ஆலோசனையின்பேரில் பசுமை தீர்ப்பாயத்தில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த பொதுநல வழக்கின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் ”ஸ்ரீவைகுண்டம் அணையில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினாலும், சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்த காரணத்தினாலும் அனல்மின் நிலையங்கள், ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் எடுக்க கூடாது” என்று கடந்த காலங்களில் தடை உத்தரவுகள் பிறப்பித்தது.

இப்படியாக, இந்த பொதுநல வழக்கு டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தொடர்ந்து பல்வேறு கட்டமாக நடத்தப்பட்டும் வந்தது. நீதிமன்றங்களின் ஒவ்வொரு விசாரணையின்போதும், ”தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல்-வடிகால் வாரியத்தினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த தடை உத்தரவினை நீக்கி, அணையில் இருந்து தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழக்கம்போல வழங்கி வருகின்றனர்.

இருந்தபோதும், 20எம்.ஜி.டி திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்ககோரி தூத்துக்குடி எஸ்.ஜோயல் ”தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்” தொடர்ந்து போராடியும் வருகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (18.06.2020) தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத்தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 11.09.2020 அன்று நடைபெறும் என்று பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அந்நாளில் இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் விவசாயப் பெருங்குடி மக்கள் கடன்சுமையால் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். தாய்மார்களோ குடிப்பதற்கு குடிதண்ணீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் பரிதவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் வரும் செப்டம்பர் 11ம் தேதி பசுமை தீர்ப்பாயம் வழங்கும் சிறப்பு மிக்க தீர்ப்பு ”20எம்.ஜி.டி திட்டத்திற்கு நிரத்தரமான முற்றுப்புள்ளி வைத்து மாவட்டத்திலுள்ள விவசாய பெருங்குடி மக்கள், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு தடையில்லாத வாழ்வு அளித்திடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here