கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த மேலும் ஒரு விசாரணைக் கைதி உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சாத்தான்குளம் பனை குளத்தைச் சேர்ந்த ராஜா சிங் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு கைதி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சாத்தான்குளம், பேய்குளம் ஊரில் ஜெயக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அது குறித்து சாத்தான் குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 18 பேரை தேடி வந்தனர். இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த வழக்கு சம்மந்தமாக தெற்கு பேய்குளம் சுந்தரம் மகன் துரையை போலீஸார் தேடி வந்தனர். அவரை தேடி சென்ற போலீஸார், அவர் இருக்கும் இடத்தை காட்ட சொல்லி, அவரது தம்பி மகேந்திரனை அழைத்து சென்றனர். அப்போது போலீஸார் மகேந்திரனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து துரை சரண்டர் ஆனார்.
அதன் பிறகு மகேந்திரனை போலீஸார், விட்டுவிட்டனர். வெளியில் வந்த மகேந்திரன், நோய்வாய்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். முளையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். இதற்கிடையே சிகிச்சை பலனளிக்காமல் மகேந்திரன், இறந்தார். அவரது இறப்பு குறித்து குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தாலும் புகார் கொடுக்கும் அளவிற்கு அவர்கள் துணிந்து முன் வரவில்லை.
இந்தநிலையில் தற்போது சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் இறப்பிற்கு பிறகு மகேந்திரனின் குடும்பத்தினர், துணிந்து மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அது குறித்து விசாரணை செய்ய மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே பேய்க்குளம் ஜெயகுமார் கொலை வழக்கில் பிடித்து கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டிருக்கும் மேலபனைக்குளத்தை சேர்ந்த ராஜாசிங் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவரை தற்போது கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.
சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்படும் கைதிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று பாதிப்பு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.