அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 அரசு வழங்கிட வேண்டும் – ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை

0
724
uoorvasi amirtharaj

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 அரசு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது சில தளர்வுகளுடன் ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு ரூ.1000 வழங்கி வருகிறது. அதேபோல் மதுரை மாவட்டத்திலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கிட அரசு உத்திரவிட்டுள்ளது.

ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தற்போது தமிழக அரசு ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வாகன போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இ பாஸ் வழங்கும் படி உத்திரவிட்டுள்ளது. இதனால் மாவட்டங்களுக்குள் மட்டும் தான் வாகன போக்குவரத்து நடைபெறும் நிலை உள்ளது. மேலும் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சென்னை, மதுரை மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.1000 வழங்கி வருவது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ-1000 நிவாரணம் வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here