குரும்பூர் அருகே வீடுகள் சூறை பெண் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது 24 பேருக்கு வலை

0
80
nazareth news

குரும்பூர், ஜூன் 27 அம்மன்புரம் அருகே உள்ள செந்தாமரையில் கோஷ்டி மோதலில் பெண் உட்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல் வீடுகளையும் சூறையாடினர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் 24 பேரை தேடி வருகின்றனர்.

குரும்பூர் அருகே உள்ள கானம் அடுத்த செந்தாமரைவிளையில் முன்னாள் ஊர் தலைவர் செந்தாமரை கண்ணன் கோஷ்டியினருக்கும், தற்போதுள்ள ஊர் தலைவர் மாதவன் கோஷ்டியினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் இருதரப்பை சேர்ந்தவர்களும் மோதி கொண்டனர். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தாமரைவிளை நடுத்தெருவை சேர்ந்த கந்தசாமி(68), இவரது மனைவி ஞானவடிவு(65) ஆகிய இருவரும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த எதிர்தரப்பை சேர்ந்த சிலர், கந்தசாமி மற்றும் ஞானவடிவை அரிவாளால் கையில் வெட்டி, கம்பியால் தலையில் தாக்கியதோடு வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி சேதப்படுத்தினராம்.

இதனைத்தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த காசி, இவரது மனைவி அம்மாள்கனி, மகன்கள் ஆனந்தகுமார், முத்துக்குமரன் ஆகியோருடன் தகராறு செய்தனர். அப்போது ஆனந்தகுமாரையும் அரிவாளால் வெட்டி கம்பியால் தாக்கினர். தடுக்க வந்த ஆனந்தகுமார் பாட்டி இசக்கியம்மாளையும், அம்மாள்கனியையும் கீழே தள்ளி தாக்கினர். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த வீடுகளையும் சூறையாடினர். இதில் படுகாயமடைந்த கந்தசாமி, ஞானவடிவு, ஆனந்தகுமார் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டி மகன்கள் எழிலரசன், கவுதம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சிவந்திபிரபு, செந்தூர்பாண்டி, லெட்சுமணன், பால்பாண்டி, சிவபெருமாள், ஆனந்தராஜ், சூர்யபாண்டி, அர்ச்சுணன், மணிவண்ணன், சின்னத்துரை, முத்து மகன் சின்னத்துரை, முத்துக்குமார், சுரேஷ், சக்திகுமார், அருண்சங்கர், பாரத் என்ற பார்த்தீபன், மாசானமுத்து, கொடிமாலை, ராதிகா, லதா, சந்தியா, பூஇசக்கி, முத்துலெட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here